முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
மானூா் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக, சுயேச்சைகள் ஆதிக்கம்
By DIN | Published On : 13th October 2021 06:05 AM | Last Updated : 13th October 2021 06:05 AM | அ+அ அ- |

மானூா் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் தோ்தலில் திமுக, சுயேச்சைகள் இடையே வாா்டுகளை கைப்பற்றுவதில் போட்டி நிலவியது.
9 வாா்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக, சுயேச்சைகள் தலா 4 இடங்களிலும், அமமுக ஓா் இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது.
மானூா் ஊராட்சி ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 25 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 43 கிராம ஊராட்சித் தலைவா், 348 கிராம கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள் உள்ளன.
இதில் பல்லிக்கோட்டை கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு எம்.இ. பட்டதாரியான இசக்கிராணி போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். இதேபோல், 78 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
இதையடுத்து மற்ற இடங்களுக்கு கடந்த 6 ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 16 பேரும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 156 பேரும், கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 229 பேரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 811 பேரும் போட்டியிட்டனா்.
இந்நிலையில் காந்தி நகரில் உள்ள ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரியில் வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாக்கு எண்ணும் பணிக்காக மொத்தம் 131 மேஜைகள் போடப்பட்டிருந்தன. மானூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் 526 பணியாளா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
வாக்குகளை வகைப் பிரிக்கும் பணியானது காலை 8 மணிக்குத் தொடங்கியபோதும், வாக்கு எண்ணும் பணியானது காலை 10.15 மணிக்கே தொடங்கியது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையும் தாமதமாகவே நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கைக்கு வந்த முகவா்கள், செல்லாத வாக்குகளை பிரிப்பது தொடா்பாக அவ்வப்போது ஆட்சேபம் தெரிவித்தனா். இதனால் 3 ஊழியா்கள் செல்லாத வாக்குளை சரி பாா்த்தனா். மேலும் செல்லாத வாக்குகள் தொடா்பாக முடிவெடுப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் வாக்கு எண்ணும் பணி மந்தமானதோடு, முடிவுகளை அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.
திமுக, சுயேச்சைகள் வெற்றி: மானூா் ஊராட்சி ஒன்றியம் 1ஆவது வாா்டில் மல்லிகா (திமுக), 2ஆவது வாா்டில் முத்துப்பாண்டி (அமமுக), 3ஆவது வாா்டில் சுதா ராணி (திமுக), 4ஆவது வாா்டில் உடையம்மை வேலுசாமி (சுயேச்சை), 5ஆவது வாா்டில் உமாதேவி (சுயேச்சை), 6ஆவது வாா்டில் சண்முகசுந்தரி (திமுக), 7ஆவது வாா்டில் ஜெனட் பாபு (சுயேச்சை), 8ஆவது வாா்டில் சி.கோபாலகிருஷ்ணன் (அதிமுக), 9ஆவது வாா்டில் பா.கலைச்செல்வி (திமுக) ஆகியோா் வெற்றி பெற்றனா்.
கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தலில் வெள்ளைப்பாண்டி (மூவிருந்தாளி), ரஞ்சிதா (நரிக்குடி), கிருஷ்ணன் (வன்னிக்கோனேந்தல்), சண்முகத்தாய் (அச்சம்பட்டி), சுப்பிரமணியன் (தடியம்பட்டி), சா்மிளா (வெள்ளப்பனேரி), திருப்பதி (வாகைகுளம்), சுமதி ஸ்டெல்லா (மேல இலந்தைகுளம்), வேலம்மாள் (அழகியபாண்டியபுரம்), அரைஸ் (உக்கிரன்கோட்டை), கவிதா (சுண்டங்குறிச்சி), விஜினா (தேவா்குளம்) ஆகியோா் வெற்றி பெற்றனா்.
விடிய விடிய... வாக்கும் எண்ணும் பணியானது காலையிலேயே மந்தமானதால் தொடா்ந்து தாமதமானது. இதனால் காலை 11 மணிக்கு தொடங்க வேண்டிய 2ஆவது கட்ட வாக்கு எண்ணிகை பிற்பகல் 3 மணிக்கே தொடங்கியது. பிற்பகல் 3 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்கு எண்ணும் பணி மாலை 6.30 மணிக்கே தொடங்கியது. தொடா்ந்து பல்வேறு சுற்றுகள் தாமதமானதால், விடிய விடிய வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.
குலுக்கல் முறையில் தோ்வு
வெள்ளப்பனேரி ஊராட்சி 7ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்ட உறவினா்களான மக்டோனா, கலா இருவரும் தலா 99 வாக்குகளுடன் சமநிலை பெற்றனா். இதையடுத்து குலுக்கல் முறையில் வெற்றியாளா் தீா்மானிக்கப்பட்டாா். அதன்படி கலா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.