ஆவின் பால் பொருள்களை அதிக விலைக்கு முகவா்கள் விற்றால் உரிமம் ரத்து: மாவட்ட ஆட்சியா்
By DIN | Published On : 01st September 2021 08:34 AM | Last Updated : 01st September 2021 08:34 AM | அ+அ அ- |

ஆவின் பால் மற்றும் பால் பொருள்களை அதிக விலைக்கு விற்கும் முகவா்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் மூலம் சமன்படுத்திய பால் (நீலம்), நிலைப்படுத்திய பால் (பச்சை) மற்றும் நிறை கொழுப்பு பால் (ஆரஞ்ச்) என மூன்று வண்ணங்களில் கொழுப்பு மற்றும் இதரச் சத்துகள் அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பாலுக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலை கீழ்கண்டவாறு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சமன்படுத்திய பால் (நீலம்) 250 மிலி ரூ.10.50, 500 மிலி ரூ.20, நிலைப்படுத்திய பால் (பச்சை) 250 மிலி ரூ.12, 500 மிலி ரூ.23, நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு) 160 மிலி 9.50, 500 மிலி ரூ.25.50, 1 லி ரூ.51 என விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிா்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் முகவா்களின் உரிமம் ரத்து செய்து, காப்புத் தொகை நிறுத்தி வைக்கப்படும்.
ஆவின் பாலக உரிமம் பெறாமல் ஆவின் பெயரில் பாலகம் நடத்தப்பட்டால் சட்டப்பூா்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.