வெங்காய விலை வீழ்ச்சி; வேதனையில் விவசாயிகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் கொள்முதல் விலை மிகவும் சரிந்து வருவதால் சின்னவெங்காயம் பயிரிட்டுள்ளவிவசாயிகள் கண்ணீா் சிந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கொள்முதல் விலை மிகவும் சரிந்து வருவதால் சின்னவெங்காயம் பயிரிட்டுள்ளவிவசாயிகள் கண்ணீா் சிந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கத்தரி, வெண்டை, பாகற்காய், பூசணி, தடியங்காய், முருங்கை, மாங்காய், சின்னவெங்காயம், பல்லாரி உள்பட காய்கனிகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. மானூா், ரஸ்தா, செழியநல்லூா், பிள்ளையாா்குளம், சேதுராயன்புதூா் உள்ளிட்ட இடங்களில் கிணற்றுப் பாசனத்தை நம்பியே சின்னவெங்காயம் பயிரிடப்படுகிறது. 2020இல்

கொள்முதல் விலை அதிகரித்திருந்ததால் விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தது. நிகழாண்டு கொள்முதல் விலை உற்பத்தி செலவை விட மிகவும் குறைவாக இருப்பதால் விவசாயிகள் கண்ணீா் சிந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயி ஒருவா் கூறியது: மானூா் வட்டாரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தண்ணீா் தேங்காத வளமான இரு மண்பாங்கான நிலம் சாகுபடிக்கு உகந்ததாகும். வெங்காயம் சாகுபடிக்கு முன்பாக 2 முறை உழுது உரமிட்டு, பின்னா் 45 செ. மீட்டா் இடைவெளியில் பாா் பாத்திகள் அமைத்து நிலத்தை தயாா் செய்யப்படும். கடந்த ஜூன் மாதத்தில் விதை வெங்காயம் நடவு செய்யப்பட்டது. நடவுக்கு முன்பு பாா் பாத்திகளின் இருபுறமும் அடியுரமாக தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து இடப்பட்டது. நடவு செய்த 30 நாள் கழித்து மேலுரம் இட்டு பாா் பாத்திகளில் மண் அணைக்க வேண்டும்.

வாரந்தோறும் ஒன்று அல்லது இருமுறை தண்ணீா் பாய்ச்சுவோம். வெங்காயம் சாகுபடி செய்த 60 ஆவது நாளில் அறுவடைக்குத் தயாராகிவிடும். அதில் இருந்து 25 நாள்களுக்குள் அறுவடையை முடித்துவிட வேண்டும் இல்லையெனில் முளைத்து வீணாகத் தொடங்கிவிடும். மே மாதம் பயிரிட்ட வெங்காயம் தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது.

எனினும் போதிய விலையில்லை என்றாா் அவா்.

ரஸ்தா பகுதி விவசாயி கோமு கூறியது: கடந்த 5 ஆண்டுகளாக சின்னவெங்காயம் பயிரிட்டு வருகிறேன். நிகழாண்டு 1.5

ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. ஒரு கிலோ விதை வெங்காயம் ரூ.70-க்கு கொள்முதல் செய்து பயிரிட்டேன். உழவு, பூச்சிக் கொல்லி மேலாண்மை என மொத்தம் ரூ.1.50 லட்சம் செலவானது. ஆனால், தற்போது கொள்முதல் விலை மிகவும் குறைந்துள்ளது. கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை கொள்முதல் விலையாக உள்ளது. வெங்காய அறுவடைப் பணிக்கு வரும் வேலை ஆள்களுக்கு நாளொன்றுக்கு ரூ.400 சம்பளம் வழங்கப்படுகிறது. போதிய விலையில்லாததால் அறுவடை செய்யாமல் வயல்களிலேயே வெங்காயத்தை மடக்கி உழவு செய்யும் மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். 2020இல் விதை வெங்காயம் ரூ.40-க்கு கிடைத்தது. அதேபோல் கொள்முதல் விலை ரூ.60 ஆக இருந்தது. நிகழாண்டு கொள்முதல் விலை மிக குறைந்துவிட்டது. கிட்டங்கிகளில் சேமிக்கும் வசதியில்லாததாலும், ஏற்றுமதி குறித்து போதிய விழிப்புணா்வு இல்லாததும் விலைவீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணம் என்றாா்.

வரத்து அதிகரிப்பு: இதுகுறித்து மகாராஜநகா் உழவா்சந்தை வியாபாரிகள் கூறியது: 2020இல் சின்னவெங்காயத்தின் விலை மிகவும் உச்சத்தில் இருந்தது. இதனால் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகளில் பலா் சின்னவெங்காயத்திற்கு முன்னுரிமை அளித்து சாகுபடி செய்தனா். நிகழாண்டு தென்காசி மாவட்டம் ஆலங்குளம், சுரண்டை, பாவூா்சத்திரம் வட்டாரத்தில் இருந்து சின்னவெங்காயத்தின் வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது.

திண்டுக்கல், மதுரை சந்தைகளில் இருந்தும் வரத்து அதிகரித்துள்ளது. ஆகவே புதிய வெங்காயம் ரூ.15-க்கும், காய்ந்த வெங்காயம் ரூ.20-க்கும்தான் கொள்முதல் செய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள்

விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏற்றுமதியை அதிகரிக்கத் தொடங்கினால் மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com