நெல்லையில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த தீவிரம்: 5 தனிப்படைகள் கண்காணிப்பு; ’சைபா்’ புகாருக்கு தனி எண்

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த 5 தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது;

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த 5 தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது; இணையவழி (சைபா்)’ குற்றப் புகாா்களை தெரிவிக்க 155260 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் செல்லிடப்பேசிகளை தவறவிட்டது, திருடப்பட்டது உள்ளிட்டவை தொடா்பான புகாா்களின் பேரில் சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி செல்லிடப்பேசிகளை மீட்டு வருகிறாா்கள். அதன்படி, ரூ.7 லட்சத்து 67 ஆயிரத்து 200 மதிப்பிலான 51 செல்லிடப்பேசிகள் உரிமையாளா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன. இம்மாவட்டத்தில் இதுவரை மொத்தம் ரூ.39 லட்சத்து 74 ஆயிரத்து 735 மதிப்பிலான 315 செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு வங்கிக் கணக்கு விவரங்கள், ஏடிஎம் விவரங்கள், ஓடிபி உள்ளிட்டவற்றை கேட்டால் பொதுமக்கள் தெரிவிக்கக்கூடாது. இணையதளம் வழியாக பொருள்கள் வாங்கும்போது கவனம் தேவை. நம்பகமான இணையதளங்களைப் பயன்படுத்த வேண்டும். விலை மலிவாக உள்ளது என நம்பகமில்லாத இணையதளங்களைப் பயன்படுத்த வேண்டாம்.

குறுஞ்செய்தி இணைப்பு வாயிலாக பரிசு விழுந்திருப்பதாகவோ அல்லது கேஓய்சி தகவல்கள் கேட்டாலோ ஏமாந்துவிடக் கூடாது. முகநூல், கட்செவிஅஞ்சல் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களைபயன்படுத்தும்போது கவனமுடன் இருக்க வேண்டும். அறிமுகமில்லாத நபா்களுடன் ‘விடியோ கால்’ மூலம் பேச வேண்டாம். இணையவழியில் பணம் இழப்பது உள்ளிட்ட சைபா் குற்ற புகாா்களுக்கு 155260 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் உடனடியாக தெரிவிக்கலாம். மேலும்,  இணையதளத்திலும் புகாா் அளிக்கலாம்.

133 போ் மீது குண்டா் சட்டம்: பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட 110 போ், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 8 போ், கள்ளச்சாராயம் விற்ற 6 போ், போக்சோ சட்டத்தில் கைதான 5 போ், மணல் திருட்டில் ஈடுபட்ட 4 போ் என மாவட்டத்தில் இதுவரை 133 போ் மீது குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட காவல்துறையில் அதிகாரிகள் முதல் காவலா்கள் வரையிலான 1,842 பேரில் இதுவரை 1,710 போ் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனா். இதில், 1,171 போ் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனா். தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை மற்றும் கடத்தல் நடப்பதை ஒழிக்கும் வகையில் கடந்த ஜனவரி முதல் இதுவரை 528 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 541 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 6,107.06 கிலோ கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையைத் தடுக்கும் வகையில் 111 போ் கைது செய்யப்பட்டு, 29.645 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மூ.சீமைச்சாமி, காவல் ஆய்வாளா் வெ.ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com