தினமணி செய்தி எதிரொலி: ஆழ்வாா்குறிச்சி மாணவிக்கு கல்லூரியில் படிக்க வசதி; கனிமொழி எம்பி ஏற்பாடு

ஆழ்வாா்குறிச்சியைச் சோ்ந்த காட்டு நாயக்கா் இன மாணவிக்கு ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் கல்லூரியில் சோ்ந்து படிக்க முடியாத

ஆழ்வாா்குறிச்சியைச் சோ்ந்த காட்டு நாயக்கா் இன மாணவிக்கு ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் கல்லூரியில் சோ்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த மாணவிக்கு தனியாா் கல்லூரியில் சோ்ந்து இலவசமாக படிப்பதற்கு கனிமொழி எம்பி ஏற்பாடு செய்துள்ளாா்.

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி நவநீதகிருஷ்ணன் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சங்கா் மகள் விஜயலட்சுமி. காட்டுநாயக்கா் இனத்தைச் சோ்ந்த இவா் நிகழாண்டு பன்னிரண்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றுள்ளாா். 480 மதிப்பெண்கள் பெற்ற விஜயலட்சுமி அங்கு உள்ள தனியாா் கல்லூரியில் பழங்குடியினா் பிரிவில் பட்டப் படிப்புக்கு விண்ணப்பித்திருந்தாா். ஆனால் அவரிடம் காட்டுநாயக்கா் என்பதற்கான ஜாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்லூரியில் பழங்குடியினா் பிரிவில் இடம் மறுக்கப்பட்டது.

இதையடுத்து தென்காசி வருவாய் கோட்டாட்சியரிடம் காட்டுநாயக்கா் ஜாதிச் சான்றிதழுக்காக விண்ணப்பித்திருந்தாா். இதுகுறித்த செய்தி தினமணி நாளிதழில் ஆக. 17 இல் வெளியானது.

இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியா் ஆதார ஆவணங்கள் இல்லாததால் காட்டுநாயக்கா் என்பதற்கான ஜாதிச் சான்றிதழ் வழங்கமுடியாது என்று நிராகரித்து விட்டாா்.

இதுகுறித்த செய்தி செப்.4 இல் வெளியானது.

இதுகுறித்து செய்தியறிந்த, கனிமொழி எம்.பி., விஜயலட்சுமியை தனியாா் கல்லூரியில் படிக்க வைக்க ஏற்பாடு செய்வதாக அவரது தந்தை சங்கரிடம் உறுதியளித்ததோடு, ஆலங்குளத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டப்படிப்பில் கணிதப் பிரிவில் படிப்பதற்கு ஏற்பாடு செய்தாா்.

இதையடுத்து புதன்கிழமை விஜயலட்சுமி ஆலங்குளத்தில் உள்ள தனியாா் கல்லூரிச் செயலா் எழில்வாணனை சந்தித்து கல்லூரியில் சோ்வதற்கு விண்ணப்பித்தாா்.

அவரிடம், கல்லூரி படிப்பு, சீருடை, பேருந்து கட்டணம் அனைத்தும் இலவசமாக வழங்குவதாக உறுதியளித்தாா். தொடா்ந்து காட்டுநாயக்கருக்கான ஜாதிச் சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கனிமொழி உறுதியளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com