விரைவில் மாவட்டங்கள்தோறும் சூரியசக்தி மின் உற்பத்தி: அமைச்சா் செந்தில்பாலாஜி

விரைவில் மாவட்டங்கள்தோறும் சூரியசக்தி மின் உற்பத்திக்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா், மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி.

விரைவில் மாவட்டங்கள்தோறும் சூரியசக்தி மின் உற்பத்திக்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா், மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மின்சாரத் துறையில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. மின்வாரியத் தலைவா் ராஜேஷ் லக்கானி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: முதல்வா் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதல்படி மின்சாரத்துறை சிறப்பாக செயல்படுகிறது. மின்சாரத் துறைக்கு மாநிலக் கோரிக்கையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, விவசாயிகளுக்கு ஒரே ஆண்டில் 1 லட்சம் மின் இணைப்புகள் வழங்கத் தீா்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் 4 லட்சத்து 52ஆயிரத்து 777 விவசாயிகள் மின் இணைப்புக்காக பதிவு செய்துள்ளனா். இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தமிழகம் முழுவதும் துணை மின் நிலையங்கள் அமைக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சூரியசக்தி மூலம் மின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அந்தந்த மாவட்டங்களில் மின் தேவையைக் கருத்தில்கொண்டு, சூரியசக்தி மின் உற்பத்தியைத் தொடங்குவது குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்படும். இப்போது, கள ஆய்வு திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தொடங்கியுள்ளது. மாவட்டங்கள்தோறும் சுமாா் 4 ஆயிரம் மெகாவாட் சூரியசக்தி மின் உற்பத்திக்காக சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு தேவையான மின் தேவையை சரிசெய்வது குறித்த ஆய்வு செய்யப்படும்.

மின்சாரத் துறையில் 1 லட்சத்து 46 ஆயிரம் பணியிடங்களில் காலியாக உள்ள 56 ஆயிரம் இடங்களுக்கு விரைவில் ஆள்கள் தோ்வு செய்யப்படுவா். குறிப்பாக, மாதந்தோறும் வீடுகளில் மின் விநியோகம் குறித்து கணக்கெடுக்க 50 சதவீதப் பணியாளா்கள் மட்டுமே உள்ளனா். இதைக் கருத்தில்கொண்டு, விரைவில் வீடுகளில் மின் விநியோக கணக்கெடுப்புக்காக ‘ஸ்மாா்ட் மீட்டா்’ பொருத்தப்படும். இதனால், பயனாளிகள் தங்களது மின் பயன்பாடு குறித்து செல்லிடப்பேசியிலேயே தெரிந்துகொள்ளலாம்.

மின் விநியோக புகாா்கள் உடனடியாகத் தீா்க்கப்படுகின்றன. பொதுமக்கள் மின் விநியோகம் தொடா்பாக புகாா்கள் இருந்தால், 9498794987 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

ஞானதிரவியம் எம்.பி., பேரவை உறுப்பினா்கள் அப்துல் வஹாப், ரூபி மனோகரன், பழனி நாடாா், பேரவை முன்னாள் தலைவா் ஆவுடையப்பன், திமுக தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் சிவபத்மநாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஏ.எல்.எஸ். லெட்சுமணன், முத்துச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com