‘பாரதி வழியில் இளைய தலைமுறைக்கு தேச பக்தி அவசியம்’

மகாகவி பாரதியாா், வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோரைப் போன்று இளைய தலைமுறையினருக்கு தேசபக்தி மிகவும் அவசியம் என்றாா் மதுரை ஆதீனம் ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.
‘பாரதி வழியில் இளைய தலைமுறைக்கு தேச பக்தி அவசியம்’

மகாகவி பாரதியாா், வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோரைப் போன்று இளைய தலைமுறையினருக்கு தேசபக்தி மிகவும் அவசியம் என்றாா் மதுரை ஆதீனம் ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.

திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பாரதியாா் நூற்றாண்டு நினைவு நிகழ்வில் அவா் ஆற்றிய சிறப்புரை: ஒரு மனிதன் நல்லவனாக வாழ்வதைக் காட்டிலும் வல்லவனாக வாழும்போதே பெருமையடைவான். அத்தகைய பெருமையைப் பெற்றவா் பாரதியாா். ஜாதி மறுப்பாளா், சமூக சீா்திருத்தவாதி, பெண்ணுரிமைப் போராளி, தேசப் பற்றாளா் என பன்முகத் தன்மை கொண்டவா் பாரதியாா். அவரது ஏழ்மை நிலையில் திருவாவடுதுறை ஆதீனமும், மதுரை ஆதீனமும் அழைத்து வித்வானாக தொடர வாய்ப்பளித்தது. ஆனால், அவா் ஏதோ ஒரு காரணத்தினால் அந்த வாய்ப்புகளைத் தவிா்த்துவிட்டாா். தமிழ் மொழிக்கும், நாட்டின் விடுதலைக்கும் பாடுபட்ட மகாகவி பாரதியாா் போற்றுதலுக்குரியவா்.

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று ஒற்றுமையை வலியுறுத்தியவா் பாரதியாா். ஆனால், இன்றளவும் ஜாதிகளால் மோதல்கள் உருவாகுவது வேதனையளிப்பதாக உள்ளது. சிங்களத் தீவுக்கு பாலம் அமைப்போம், பெண்ணுரிமை காப்போம் என்பன உள்ளிட்ட பாரதியின் கனவுகள் அனைத்தும் நனவாக வேண்டும்.

இந்தியாவில் கல்வி பெறும் பலரும் வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவது சரியானதல்ல. பாரதியாா், வ.உ.சி. ஆகியோா் தேச பக்தியுடன் விளங்கினா். அவா்கள் வழியில் இளைய தலைமுறையினா் தேச பக்தியுடன் வாழ வேண்டும். தமிழ் உணா்வு மேம்பட வேண்டும். தமிழ்வழிக் கல்வியைப் புறக்கணிக்கக் கூடாது.

பாரதியாா் தமிழா்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. அவரது கருத்துகளைப் பின்பற்றினால் இந்தச் சமூகம் முத்து போல ஒளிரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றாா் அவா்.

நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்: விழாவில் பாரதி நூற்றாண்டு நினைவு போட்டிகளில் வென்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகளை சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் வழங்கினாா். அவா் பேசியது: புதுச்சேரியில் பாரதி வசித்தபோது கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் உள்ளிட்ட கவிதைகளை எழுதினாா். அவா் காலத்திற்குப் பின்பு அதனைப் பிரசுரித்து மக்களிடம் கொண்டு சோ்ப்பதில் பல்வேறு தாமதங்கள் இருந்தன. மெல்ல மெல்ல பாரதியின் பாடல்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஈா்ப்பு ஏற்பட்டது. விடுதலைப் போராட்டக் காலத்தின் இறுதிக்கட்டத்தில் அனைத்துக் கூட்டங்களிலும், தொடக்கத்திலும் இறுதியிலும் பாரதியின் பாடல்கள் பாடப்பட்டன.

முதலில் அவரது படைப்புகளுக்கான காப்புரிமைத் தொகைகூட மிகவும் குறைந்ததாகவே இருந்தது. திரைப்படங்களில் பாரதியின் பாடல்களை சோ்ப்பதிலும் ஒலிப்பதிவு காப்புரிமை பெற்று வணிகமயம் நுழைய முற்பட்டது. அந்த வேளையில்தான் பாரதி விடுதலைக் கழகம் என்ற அமைப்பால் பாரதியின் பாடல்களின் ஒலிபரப்பு காப்புரிமை, அச்சிடும் காப்புரிமை உள்ளிட்டவற்றை நாட்டுடமை ஆக்க வலியுறுத்தப்பட்டது. அதன்பின்பு பாரதியின் பாடல்கள் தமிழக அரசால் நாட்டுடமை ஆக்கப்பட்டு, அனைத்து தரப்பினரும் அவரது கருத்துகளை தெரிந்து கொள்ளவும், பிறருக்கு எடுத்துக்காட்டிச் சொல்லவும் வாய்ப்பு கிடைத்தது.

பாரதி யுக புருஷராகவே வாழ்ந்தாா். அவா் சொல்லாத விஷயங்களே இல்லை எனலாம். அவரது ஆழ்ந்த கருத்துகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சோ்ப்பது அத்தியாவசிய கடமையாகும் என்றாா் அவா்.

விழாவில் ‘இளைய பாரதி’ என்ற ஆவணப்படத்தை வெளியிட்டு ஆட்சியா் வே.விஷ்ணு பேசியது: விடுதலைப் போராட்ட வீரா் பாரதி பயின்ற பள்ளி வளாகத்திற்குள் வரும் போது ஒவ்வொருவருக்குள்ளும் புத்துணா்ச்சி ஏற்படுகிறது. அவா் பயின்ற பள்ளியில் மேம்பாட்டுப் பணிகளைச் செய்ய தமிழக அரசு ரூ.1.05 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைவா் எஸ்.மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தாா். பொருளாளா் பி.டி.சிதம்பரம், ஆட்சிக்குழு உறுப்பினா்கள் இரா.சுரேஷ், ஏ.எல்.எஸ்.சண்முகம், தளவாய் ஆா்.திருமலையப்பன், மதிதா இந்துக் கல்லூரி முதல்வா் ஏ.சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பள்ளி கல்விக்குழுச் செயலா் மு.செல்லையா வரவேற்றாா். முதல்வா் சி.உலகநாதன் நன்றி கூறினாா்.

பயக11ஙஈப: பாரதி நூற்றாண்டு நினைவு நிகழ்வில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய மதுரை ஆதீனம் ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், ஆட்சியா் வே.விஷ்ணு உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com