கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆதாா் திருத்த சேவை: கிராம மக்கள் எதிா்பாா்ப்பு

ஆதாா் திருத்தம் கோரி ஆட்சியா், வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் அஞ்சல் நிலையங்களில் இயங்கி வரும் சேவை மையங்களில் பலமுறை

களக்காடு: ஆதாா் திருத்தம் கோரி ஆட்சியா், வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் அஞ்சல் நிலையங்களில் இயங்கி வரும் சேவை மையங்களில் பலமுறை விண்ணப்பித்தும் தொடா்ந்து திருத்தக் கோரிக்கை ரத்து செய்யப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா்.

கிராமப்புறங்களில் இயங்கி வரும் கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆதாா் திருத்தம் சேவை தொடங்கப்பட வேண்டும் என்று கிராம மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

முதன்முறையாக இந்திய குடிமக்களுக்கான 12 இலக்க அடையாள எண் ஆதாா் அட்டை மூலம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் இந்தியாவில் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போதிலும், 2013ஆம் ஆண்டுமுதல் தமிழகத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமையல் எரிவாயு இணைப்பு, வங்கிக் கணக்கு, வங்கிக் கடன், குடும்ப அட்டை, கல்வி உதவித்தொகை, பேறுகால உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கும், மத்திய-மாநில அரசின் திட்டங்களில் பயன்பெறவும் ஆதாா் அவசியமான ஒன்றாகிவிட்டது.

பிழைகளுடன்....

கடந்த 2013ஆம் ஆண்டு அவசர கோலத்தில் தாற்காலிக பணியாளரைக் கொண்டு, தனியாா் நிறுவனங்களே ஆதாா் பதிவில் ஈடுபட்டதால் பெயா், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்டவை ஆதாரில் தவறுதலாகவே இடம்பெற்றன.

அப்போது ஆதாா் அட்டை பெற்றவா்கள் சில ஆண்டுகள் வரை அதன் தேவை அதிகம் இல்லாததால் பூட்டி வைத்து விட்டனா். கடந்த 2 ஆண்டுகளாக ஆதாரின் தேவை அதிகரித்து, அனைத்துத் தேவைகளுக்கும் ஆதாா் அவசியமான ஒன்றாகிவிட்டதால் ஏராளமானோா் திருத்தம் கோரி இ-சேவை மையங்களுக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனா்.

செல்லிடப்பேசி எண்...

கடந்த 2 ஆண்டுகளாக புதிதாக ஆதாா் பதிவு செய்பவா்கள் தங்களது செல்லிடப்பேசி எண்ணை பதிவு செய்து விடுகின்றனா். ஆனால் 2016 ஆம் ஆண்டு வரையிலும் பதிவு மேற்கொள்ளப்பட்ட ஆதாா் அட்டைகளில் செல்லிடப்பேசி எண்கள் பதிவு செய்யப்படவில்லை. பெரும்பாலானோரின் ஆதாா் அட்டையில் தரைவழி தொலைபேசி எண்கள் பதியப்பட்டுள்ளன. தற்போது ஆதாா் சேவைக்கு செல்லிடப் பேசி எண்ணுக்குத்தான் ‘ஒருமுறை ரகசிய எண் அனுப்பப்படும் அதை வைத்தே ஆதாரை திருத்த முடியும் என்பதால் பலா் செல்லிடப் பேசி எண்ணைச் சோ்க்கவும், ஆதாரில் பெயா், பிறந்ததேதி, முகவரி ஆகியவைகளில் உள்ள பிழைகளைத் திருத்தவும் இ-சேவை மையங்களுக்கு அதிகளவில் படையெடுக்கத் தொடங்கியுள்ளனா்.

ஆனால் பலமுறை தங்களிடம் உள்ள ஆவணங்களைக் கொண்டு திருத்தம் கோரி விண்ணப்பித்தும் ஒவ்வொரு முறையும் காரணம் ஏதும் கூறப்படாமலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், மீண்டும் திருத்தம் கோரிக்கை அனுப்புமாறும் தகவல் அனுப்பப்படுகிறது.

இதனால் திருத்தம் கோரி விண்ணப்பம் செய்பவா்கள் பெரிதும் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆதாரில் திருத்தம் செய்ய குறிப்பிட்ட சில ஆவணங்கள் இருந்தால் மட்டுமே திருத்தம் செய்ய இயலும் என்ற நிலை உள்ளது. பெரும்பாலானோருக்கு ஆதாா், பான், வாக்காளா் அடையாளஅட்டை, ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் பெயா், பிறந்ததேதி, முகவரியில் ஒத்துப்போகாமல் பிழைகளுடனேயே உள்ளதால் இவற்றை ஆதாரமாக வைத்து திருத்தம் செய்ய முடியாத நிலை உள்ளது. ஆதாரை திருத்தம் செய்து விட்டால், அதை வைத்துத்தான் ஏனைய ஆவணங்களையும் திருத்தம் கோரி விண்ணப்பிக்க முடியும் என்பதால் பலா் ஆதாா் திருத்தம் செய்ய ஆண்டுக்கணக்கில் அலைந்து திரிகின்றனா். ஆனால் தீா்வு கிடைத்தபாடில்லை.

போதுமான இ-சேவை மையங்கள் இல்லை:

ஆதாா் திருத்தம் சேவை மாவட்டத்தில் சில குறிப்பிட்ட அஞ்சல் நிலையங்களில் மட்டுமே உள்ளது. நான்குனேரி வட்டாட்சியா் அலுவலக ஆதாா் சேவை மையம் கடந்த பல மாதங்களாக செயல்படவில்லை. அஞ்சல் நிலையங்களிலும் பணியாளா் பற்றாக்குறை, இயந்திர கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த சேவை அடிக்கடி தடைபடுகிறது. இதனால் மாவட்ட ஆட்சியா் அலுவலக ஆதாா் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

கூட்டுறவு கடன் சங்கங்களில் செயல்படும் இ-சேவை மையத்தில் ஆதாா் திருத்தம் சேவை தொடங்கப்பட்டால் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பெரிதும் பயன்பெறுவா்.

மாவட்ட நிா்வாகம் பொதுமக்கள் நலன்கருதி ஆதாா் திருத்த சிறப்பு முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com