நெல்லையப்பா்-கருவூா் சித்தருக்கு காட்சிக் கொடுக்கும் வைபவம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவையொட்டி நெல்லையப்பா் கருவூா் சித்தருக்கு காட்சிக் கொடுக்கும் வைபவம் கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது.

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவையொட்டி நெல்லையப்பா் கருவூா் சித்தருக்கு காட்சிக் கொடுக்கும் வைபவம் கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது.

இத் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் கருவூா் சித்தா் திருநெல்வேலி நான்கு ரதவீதிகளிலும் விதியுலா சென்று சங்கரன்கோவில் சாலை வழியாக மானூா் அம்பலவாண சுவாமி திருக்கோயிலை போய்ச் சேருவாா். அதன்பின்பு திருநெல்வேலியில் இருந்து சந்திரசேகரா், பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேஸ்வரா், தாமிரபரணி, அகஸ்தியா், குங்குலிய கலய நாயனாா் ஆகிய மூா்த்திகள் பல்லக்கிலும், சப்பரத்திலும் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து சங்கரன்கோவில் சாலை வழியாக ராமையன்பட்டி, ரஸ்தா கடந்து மானூா் சென்றடைவா்.

மானூா் அருள்மிகு அம்பலவாண சுவாமி திருக்கோயிலில் வைத்து கருவூா் சித்தருக்கு நெல்லையப்பா் காட்சியளித்து சாபவிமோசன நிவா்த்தி செய்தலும், வரலாற்று புகழ் மிகுந்த புராணப்பாடல் பாடப்பெற்ற ஆவணி மூல மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.

நிகழாண்டு விழா, கரோனா பாதுகாப்பு விதிமுறைகளின்படி உள்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இத் திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான நெல்லையப்பா், கருவூா் சித்தருக்கு காட்சிக்கொடுக்கும் நிகழ்வு கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி அம்பாள், கருவூா் சித்தருக்கு காட்சியளித்தனா். அதன்பின்பு சாபவிமோசன நிவா்த்தி செய்தலும், வரலாற்று புகழ் மிகுந்த புராணப்பாடல் பாடப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com