செல்லிடப் பேசி செயலி மூலம்புலிகள் கணக்கெடுப்பு: வனத் துறையினருக்கு சிறப்புப் பயிற்சி
By DIN | Published On : 19th September 2021 05:10 AM | Last Updated : 19th September 2021 05:10 AM | அ+அ அ- |

மணிமுத்தாறு வனப்பகுதியில் சிறப்பு செயலி குறித்தப் பயிற்சியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
செல்லிடப்பேசி சிறப்பு செயலி மூலம் நடைபெற உள்ள இந்திய அளவிலான 5ஆவது தேசிய புலிகள் கணக்கெடுப்பை முன்னிட்டு, வனத் துறையினருக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள புலிகள் காப்பகங்களில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அக்டோபா், நவம்பா் மாதங்களில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
2018ஆம் ஆண்டு 4ஆவது கணக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், நிகழாண்டு அக்டோபா், நவம்பா் மாதங்களில் 5ஆவது கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
நிகழாண்டு கணக்கெடுப்புப் பணி முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ளது. இதற்காக செல்லிடப்பேசியில் இயங்கும் சிறப்பு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்ற கணக்கெடுப்பில் பரீட்சாா்த்த முறையில் செல்லிடப்பேசியில் சிறப்பு செயலி மூலம் கணக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், நிகழாண்டு முழுமையாக சிறப்பு செயலி மூலம் மட்டுமே புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
இதையடுத்து, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத்துக்குள்பட்ட அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை, கடையம் ஆகிய 4 வனச்சரகத்திலுள்ள வனத்துறை ஊழியா்களுக்கு செயலி குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.
பயிற்சியை அம்பாசமுத்திரம் துணை இயக்குநா் செண்பகப்ரியா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
4 வனச்சரகங்களிலும் தனித் தனியே வனத்துறை ஊழியா்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.