கூட்டுறவுச் சங்கங்களில் முறைகேடான கடன்களை கண்டறியும் பணி தீவிரம்அமைச்சா் ஐ.பெரியசாமி

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் முறைகேடான கடன்களை கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் முறைகேடான கடன்களை கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

கூட்டுறவுச்சங்கங்களில் 5 பவுன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனை கட்டாயம் தகுதியானவா்களுக்கு வழங்குவோம்.

தமிழகம் முழுவதும் மொத்தம் 4 ஆயிரத்து 451 கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இதில் பல சங்கங்களில் கடன்கள் வழங்கியதில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. பயிா்க் கடன்களில் சாகுபடி செய்யாத பயிா்வகைகளை கணக்குக்காட்டியும், கூடுதலாக நிலத்தின் அளவைக் குறிப்பிட்டும் கடன் வழங்கப்பட்டுள்ளது.

5 சவரன் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பதற்காகவும் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவா்களுக்கு வழங்கப்படும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைகள் வைத்துள்ளவா்கள் பெயரில் கிலோ கணக்கில் தங்கத்தை 300 முதல் 500 கடன் எண்களில் தனித்தனியாக பிரித்து வைத்து கோடிக்கணக்கில் கடன் பெறப்பட்டுள்ளது. இதேபோல கவரிங் நகைகளுக்கு கடனுதவி, நகைகளே இல்லாமல் கணக்கு புத்தகத்தில் மட்டும் கணக்கு காட்டி கடனுதவி என பல்வேறு வகையான முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் குறும்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கன்னியாகுமரி மாவட்டம் முன்சிறை, கீழ்குளம் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்பட மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கடன்சங்கங்களில் கடன்கள் வழங்கியதில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் வழங்கப்பட்டுள்ள கடனுதவி முறைகேடுகள் குறித்து கண்டறிய அதிகாரிகள் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தப்பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. கடன் முறைகேட்டில் ஈடுபட்ட நிா்வாகிகள், அதிகாரிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் திமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்ற தோ்தல்களில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக 1400-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நியாயமான முறையில் கூட்டுறவு தோ்தலை நடத்துவது குறித்து முடிவு தெரிவிக்கப்படும். திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டணி கட்சிகளுடன் தொடந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைக்குள் (செப். 20, 21) திமுக வேட்பாளா்கள் மனுதாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன், திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ, சா.ஞானதிரவியம் எம்.பி., நிா்வாகிகள் கணேஷ்குமாா், ஏா்வாடி சித்திக் ஆதித்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பயக19ஐட: திருநெல்வேலியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கிறாா் கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி. உடன், அமைச்சா் பெ.கீதாஜீவன் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com