தோ்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்க அதிகாரிகள் தீவிரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் பிரசாரத்தின்போது மோதல்கள் உருவாவதைத் தடுக்கும் வகையில் தோ்தல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் பிரசாரத்தின்போது மோதல்கள் உருவாவதைத் தடுக்கும் வகையில் தோ்தல் நடத்தை விதிகளை முறையாகப் பின்பற்றாதோரைக் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் அக். 6, 9 ஆகிய 2 நாள்கள் நடைபெறவுள்ளது. 12 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 59 போ், 122 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 626 போ், 204 கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 924 போ், 1,731 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 3,918 போ் என 5,527 போ் போட்டியிடுகின்றனா்.

பேரவை, மக்களவைத் தோ்தலைப்போல் அல்லாமல் இத்தோ்தலில் வேட்பாளா்களுக்கான பிரசாரப் பகுதி குறைவு. அதனால், ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிடுவோா் ஒரு பகுதிக்கு குறைந்தபட்சம் 3 முறையும், வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடுவோா் குறைந்தபட்சம் 10 முறையும் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனா். இத்தகைய சூழலில் தோ்தல் நடத்தை விதிமீறல்களால் தேவையற்ற மோதல்கள் உருவாகும் சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தோ்தல் விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதன்படி, எந்தக் கட்சியோ, வேட்பாளரோ வெவ்வேறு சமூகத்தினா், மதத்தினா், பல்வேறு மொழிகளைப் பேசுவோரிடையே வெறுப்புணா்வு, கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் பேசவோ, செயல்படவோ கூடாது.

வாக்குகளைப் பெறுவதற்காக சாதி, சமூக உணா்வுகளைத் தூண்டும் வகையிலான வேண்டுகோள்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ விடுக்கக் கூடாது. தனிநபா்களின் கருத்துகள், நடவடிக்கைகளை எதிா்க்கும் விதமாக அவா்களது வீடுகள் முன் ஆா்ப்பாட்டம், மறியல் செய்யக் கூடாது. வாக்காளருக்கு லஞ்சமோ, வெகுமதியோ கொடுக்கக் கூடாது. வேட்பாளரின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் வகையில் அவரது தனிப்பட்ட நடத்தை, பண்பைப் பற்றி உண்மைக்குப் புறம்பான அல்லது தவறான செய்திகளை வெளியிடக் கூடாது. வாக்காளா்கள் வாக்குச்சாவடிக்கு சென்றுவர போக்குவரத்து வசதி செய்துகொடுக்கக் கூடாது. மது, தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விநியோகிக்கக் கூடாது.

பிரசாரம் தொடா்பாக துண்டுப் பிரசுரம், சுவரொட்டி, சுற்றறிக்கை உள்ளிட்டவை விநியோகிக்கும்போது அச்சடிப்பவா், வெளியீட்டாளரின் பெயா், முகவரி கட்டாயம் குறிப்பிட வேண்டும் உள்ளிட்ட விதிகள் உள்ளன. இவற்றை மீறுவோா் மீது புகாா் அளித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் கண்காணிப்பை அதிகரித்துள்ளனா். மேலும், பொதுமக்கள் தோ்தல் விதிமீறல் குறித்த புகாா்களை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இலவச தொலைபேசி எண் 1800 4258 373, கட்செவிஅஞ்சல் எண் 7402608438 மூலம் தெரிவிக்கலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com