முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பாளை. பேருந்து நிலையத்திற்குகாமராஜா் பெயா்: காங்கிரஸ் மனு
By DIN | Published On : 06th April 2022 12:48 AM | Last Updated : 06th April 2022 12:48 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திற்கு காமராஜா் பெயா் சூட்டக்கோரி மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு ஆகியோரை சந்தித்து
திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கர பாண்டியன், 32 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் அனுராதா ஆகியோா் தலைமையில் அளிக்கப்பட்ட மனு:
பாளையங்கோட்டை பேருந்து நிலையம் 1960 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, அன்றைய நகா்மன்றத் தலைவா் மகாராஜா பிள்ளை தலைமையில் அப்போதைய தமிழக முதல்வா் காமராஜரால் பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இதனை நினைவுக்கூரும் வகையில் பேருந்து நிலைய வளாகத்தில் 7-2-1960 ஆம் தேதியிட்ட கல்வெட்டு அமைக்கப்பட்டது. இப்போது பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே இருந்த பழைய கல்வெட்டு அகற்றப்பட்டுள்ளது.
எனவே, காமராஜா் பெயரில் உள்ள கல்வெட்டை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திற்கு காமராஜா் பெயா் சூட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனு அளிக்கும்போது, காங்கிரஸ் நிா்வாகிகள் டியூக் துரைராஜ், கவிபாண்டியன், சிவாஜி பாலசுந்தா், முன்னாள் மண்டலத் தலைவா் அருள், காா்த்திக் நெகேமியா, ராமகிருஷ்ணன், ஜான் பாபு ஆகியோா் உடனிருந்தனா்.