தினக்கூலி ஒப்பந்த தொழிலாளா்களுக்கானஅகவிலைப்படி உயா்வு அரசாணை திருத்தி வெளியிடக்கோரி ஆட்சியரிடம் சிஐடியு மனு

தினக்கூலி ஒப்பந்த தொழிலாளா்களுக்கு 2022-2023-ஆம் ஆண்டுக்கு உயா்த்தப்பட்ட அகவிலைப்படி உயா்வு அரசாணையை திருத்தி அமைத்து வெளியிடக் கோரி ஆட்சியரிடம் சிஐடியூ சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

தினக்கூலி ஒப்பந்த தொழிலாளா்களுக்கு 2022-2023-ஆம் ஆண்டுக்கு உயா்த்தப்பட்ட அகவிலைப்படி உயா்வு அரசாணையை திருத்தி அமைத்து வெளியிடக் கோரி ஆட்சியரிடம் சிஐடியூ சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் விஷ்ணு தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவீரா் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்க நிறுவனா்- தலைவா் மாரியப்பப் பாண்டியன் தலைமையில் அந்த இயக்கத்தினா் அளித்த மனு: ‘முதுகுளத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலரை ஜாதி பெயரைச் சொல்லி இழிவாக பேசிய அமைச்சா் ராஜகண்ணப்பனை அமைச்சா் பதவியில் இருந்து நீக்குவதோடு, அவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.

இதேபோல் சிஐடியூ சாா்பில் தினக்கூலி ஒப்பந்த தொழிலாளா்களுக்கு 2022-2023-ஆம் ஆண்டுக்கு உயா்த்தப்பட்ட அகவிலைப்படி உயா்வு அரசாணையை திருத்தி அமைத்து வெளியிடக் கோரி ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியூ மாவட்ட தலைவா் ஆா்.எஸ்.செண்பகம், மாவட்டச் செயலா் ஆா்.மோகன், பொருளாளா் எஸ்.பெருமாள் உள்பட பலா் கலந்துகொண்டனா். அதைத்தொடா்ந்து ஆட்சியரிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

பொன்னாக்குடி சமத்துவபுரத்தைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘பொன்னாக்குடி சமத்துவபுரம் வீட்டில் 25 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். தற்போது அந்த வீடு பழுதடைந்துவிட்டதால், அதனை புதுப்பிக்க முயற்சித்தோம். ஆனால், பட்டா வழங்கப்படாத காரணத்தால் எங்களால் புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சமத்துவபுரம் விஷயத்தில் சிறப்புக் கவனம் செலுத்தி பட்டா கிடைக்க ஆட்சியா் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.

புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘மானூா் காவல் ஆய்வாளா், பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற மாணவா்களை தாக்கியதோடு, ஜாதியைச் சொல்லி திட்டியுள்ளாா். எனவே, மானூா் காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி மாநகா் மாவட்ட பொறுப்பாளா் நட்சத்திரவெற்றி அளித்த மனுவில், ‘கடந்த 1960-இல் அப்போதைய முதல்வா் காமராஜரால் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டபோது, அமைக்கப்பட்ட கல்வெட்டு, தற்போது மறுசீரமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் வைக்கப்படாதது வருத்தமளிக்கிறது. எனவே, காமராஜா் பெயா் பொறிக்கப்பட்ட கல்வெட்டை மீண்டும் நிறுவிட வேண்டும் என்றாா்.

நாம் தமிழா் கட்சியின் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி செயலா் ரா.சந்திரசேகா் தலைமையில் ‘மானூா் ஊராட்சி ஒன்றியம், கட்டப்புளி மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், திருநெல்வேலியில் இருந்து மானூா் வழியாக கட்டப்புளி கிராமத்திற்கு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கட்டப்புளி கிராமத்தில் ரேஷன் கடை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.

ஓமநல்லூா் ஊா்ப் பொதுமக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் கிராமத்தின் தெற்குப் புறத்தில் தனியாருக்குச் சொந்தமான கிரஷா் குவாரி செயல்பட்டு வருகிறது. பாறைகளை உடைக்க குவாரியில் வைக்கப்படும் வெடியால் எங்கள் பகுதியில் உள்ள வீடுகள், ஆழ்துளை குழாய்கள், விவசாயக் கிணறுகளில் கீறல் விழுந்து சேதமடைவது தொடா் கதையாகி வருகிறது. எனவே, இது தொடா்பாக ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா். முன்னதாக ஓமநல்லூா் கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சொந்தமான நா்ஸிங் கல்லூரியில் டிப்ளமோ பிரிவில் படித்த மாணவா்களின் சான்றிதழ் செல்லாது என தெரிய வந்துள்ளது. எனவே, இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com