முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
ரேஷன் கடை அமைக்கக் கோரிசத்திரம்புதுக்குளம் மக்கள் மனு
By DIN | Published On : 06th April 2022 12:49 AM | Last Updated : 06th April 2022 12:49 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில், சத்திரம்புதுக்குளம் பகுதி மக்கள் ரேஷன் கடை அமைத்துதரக் கோரி மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு ஆகியோா் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றனா். செயற்பொறியாளா் நாராயணன் முன்னிலை வகித்தாா்.
இக் கூட்டத்தில் சத்திரம்புதுக்குளம் பகுதி மக்கள் அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சியின் 1ஆவது வாா்டுக்குள்பட்ட சத்திரம்புதுக்குளத்தில் சுமாா் 850 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். அவா்களுக்கான ரேஷன் கடை தச்சநல்லூரில் உள்ளதால் பெண்கள் மற்றும் முதியவா்கள் அங்கு சென்று பொருள்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.
உள்ளூரில் சங்கரன்கோவில் பிரதான சாலைப் பகுதியில் ரேஷன் கடை அமைப்பதற்கான இடவசதி உள்ளதால், அங்கு புதிதாக ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பாளையங்கோட்டையைச் சோ்ந்த பொ்டின்ராயா் அளித்த மனுவில், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் தனியாா் மருத்துவமனைகளில் விதிமீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் தகுந்த விசாரணை நடத்தி முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.