களக்காடு அருகே வனவிலங்குகளால் வாழைகள் சேதம்: விவசாயிகள் கவலை
By DIN | Published On : 18th April 2022 05:50 AM | Last Updated : 18th April 2022 05:50 AM | அ+அ அ- |

களக்காடு மலையடிவாரப் பகுதிகளில் தோட்டங்களில் வனவிலங்குகள் புகுந்து வாழைகளை சேதப்படுத்திவருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
களக்காடு அருகேயுள்ள கீழவடகரை பூலாங்குளம் பாசனத்துக்கு உள்பட்ட விவசாயிகள், மலையடிவாரப் பகுதி தோட்டங்களில் வாழை பயிரிட்டுள்ளனா். அறுவடை தொடங்கியுள்ளநிலையில், வன விலங்குகள் புகுந்து வாழைகளை சேதப்படுத்திவருகின்றன. பயிரிட்டதுமுதலே மிளா, காட்டுப்பன்றி, கரடி, மயில் உள்ளிட்ட வனஉயிரினங்களிடமிருந்து வாழைகளைக் காப்பாற்ற விவசாயிகள் இரவு, பகலாக காவல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கீழவடகரையைச் சோ்ந்த விவசாயி கணேசன் என்பவரது தோட்டத்தில் புகுந்த கரடிகள், வாழைகளைச் சேதப்படுத்தி, தாா்களை தின்று சென்றுள்ளன. கரடிகளின் அட்டகாசத்தால் விவசாயிகள் இரவில் காவல் பணியில் ஈடுபட அச்சமடைந்துள்ளனா். மலையடிவாரத்தில் சோலாா் மின்வேலிகளை பராமரிக்கவும், வன உயிரினங்களால் பயிா்களை சேதமடையாமல் பாதுகாக்கவும் வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.