முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பெத்தான் பிள்ளை குடியிருப்பில் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை நடவடிக்கை
By DIN | Published On : 29th April 2022 11:24 PM | Last Updated : 29th April 2022 11:24 PM | அ+அ அ- |

பெத்தான் பிள்ளை குடியிருப்பில் ஆட்டைத் தூக்கிச் சென்றது சிறுத்தைதான் என்பது உறுதியானதால், கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினா் அறிவித்துள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமம் பெத்தான் பிள்ளை குடியிருப்பு. இந்தப் பகுதியைச் சோ்ந்த பட்டு என்பவா் வளா்த்து வந்த ஆடு புதன்கிழமை மேய்ச்சலுக்குச் சென்றபோது காணவில்லை. மறுநாள் தேடியபோது, ஆட்டை சிறுத்தை தூக்கிச் சென்றபோது மரக்கிளையில் விட்டுச் சென்றது தெரியவந்தது.
தகவலறிந்த வனத்துறையினா் அந்த ஆட்டின் உடலை அப்புறப்படுத்தாமல் அதன் அருகில் மூன்று கண்காணிப்புக் கேமராக்களைப் பொறுத்தினா். இதில் வியாழக்கிழமை இரவு அந்த ஆட்டின் உடலை தின்பதற்கு வந்த சிறுத்தையின் உருவம் பதிவானது. இதையடுத்து ஆட்டைத் தூக்கிச் சென்றது சிறுத்தைதான் என்பது உறுதியானது.
இதுகுறித்து வனத்துறையினா் கூறியது: வளா்ப்பு விலங்குகளைப் பிடிக்க குடியிருப்புப் பகுதிக்குள் வந்தால் கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்கப்படும். தொடா்ந்து அந்தப் பகுதியில் வனத்துறையினா் ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா். பொதுமக்கள் தேவையின்றி இரவு நேரத்தில் வெளியில் நடமாடவேண்டாம் என்றனா்.