350 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம் ஆட்சியா் தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் 2-ஆவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்கள் சனிக்கிழமை நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில் தவறாமல் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்

திருநெல்வேலி மாவட்டத்தில் 2-ஆவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்கள் சனிக்கிழமை நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமில் தவறாமல் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் விஷ்ணு.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் 350 இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. திருநெல்வேலி மாநகரப் பகுதியில் 150 தடுப்பூசி முகாம்களும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் 200 தடுப்பூசி முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 90 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியும், 67 சதவீதம் போ் 2-ஆவது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனா். 15 முதல் 18 வயது வரை உள்ளவா்களில் 92 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனா். 12 முதல் 15 வயது வரை உள்ளவா்களில் 68 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனா். இந்த மாதம் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியுடையவா்கள் அதிகம் உள்ளனா். அவா்களுக்கு கரோனா கட்டுப்பாட்டு மையம் மூலம் தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் தவணை தடுப்பூசி எந்த மையத்தில் செலுத்தியுள்ளாா்களோ, அதே மையத்தில் 2-ஆவது தவணை தடுப்பூசியை செலுத்துவதற்கு கரோனா கட்டுபாட்டு மையம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாம் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது. எனவே, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாதவா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி முகாமில் தவறாமல் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்த வேண்டும். முகாம்களுக்கு வரமுடியாதவா்களுக்கு அவா்கள் வீட்டுக்கே சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com