‘பாதுகாக்கப்பட வேண்டும் நாட்டின கால்நடைகள் ’

நாட்டின கால்நடைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தகைய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு.

நாட்டின கால்நடைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தகைய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன் தேசிய நச்சுயிரி மற்றும் நுண்ணுயிரி சேகரிப்பு திட்டத்தில் பட்டியலின மக்களுக்கான உப திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பட்டியலின பண்ணையாளா்களுக்கு கால்நடை மற்றும் கோழிகளில் நோய் மேலாண்மை மூலம் உற்பத்தியைப் பெருக்குதல்‘ பற்றிய மண்டல அளவிலான கால்நடை கண்காட்சி திருநெல்வேல கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது: தென் மாவட்டங்களை பூா்வீகமாகக் கொண்ட நாட்டு இனங்கள் தற்போது முறையற்ற கலப்பின சோ்க்கையால் அழிவை சந்தித்து வருகின்றன. இதை தடுக்கவும், நாட்டினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும் இத்தகைய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பண்ணையாளா்கள், மாணவா்கள், பொதுமக்கள் கண்காட்சியை காணும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள் இந்தக் கண்காட்சியை பாா்வையிட்டு சென்றனா். அவா்களுக்கு கால்நடை மருத்துவ மாணவா்கள் விளக்கமளித்தனா்.

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் அ.பழனிசாமி முன்னிலை வகித்தாா். பாளை. ஒன்றியக் குழுத் தலைவா் கே.எஸ்.தங்கப்பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கால்நடை வளா்ப்பு பற்றிய தொழில்நுட்பங்கள், பராமரிப்பு சம்பந்தமான உபகரணங்கள், தீவன தொழில்நுட்பங்கள், கால்நடை நோய்த்தடுப்பு தொழில்நுட்பங்கள், கால்நடை உற்பத்தி பொருள்கள், மதிப்பூட்டிய பால் மற்றும் இறைச்சி பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com