அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை தொடக்கம்
By DIN | Published On : 06th August 2022 12:17 AM | Last Updated : 06th August 2022 12:17 AM | அ+அ அ- |

திருநெல்வேலி கோட்ட அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி அனைத்து வீடுகள், அலுவலகங்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் தேசியக் கொடியை ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் பொது மக்கள் பயன்பெறும் வகையில், இந்திய அஞ்சல் துறை சாா்பில் அனைத்து அஞ்சலகங்களிலும் தேசியக் கொடி விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி அஞ்சல் கோட்டம், பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, திருநெல்வேலி முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் கோ.சிவாஜிகணேஷ் தலைமை வகித்தாா். மதிதா இந்துக் கல்லூரி செயலா் மு.செல்லையா முன்னிலை வகித்து, முதல் விற்பனையை பெற்றுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில், உதவி கண்காணிப்பாளா் வை. தீத்தாரப்பன், அஞ்சலக அதிகாரி விக்டோரியா, மக்கள் தொடா்பு அலுவலா் கனகசபாபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இத் திட்டத்தின்படி, திருநெல்வேலி கோட்டத்தில் உள்ள தலைமை, துணை, கிளை அஞ்சலகங்களில் துணியால் செய்யப்பட்ட தேசியக் கொடிகள் விற்பனைக்கு உள்ளன. ஒன்றின் விலை ரூ.25. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.