மாற்றுத்திறனாளிகளுக்கு குடும்ப அட்டை வழங்குவதில் முன்னுரிமை: மாநில உணவு ஆணையத் தலைவா் ஆா்.வாசுகி

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடும்ப அட்டைகள் வழங்கும் வழிமுறைகள் குறித்து அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் விளம்பரப் பலகைகள் வைக்க வேண்டும்

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடும்ப அட்டைகள் வழங்கும் வழிமுறைகள் குறித்து அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் விளம்பரப் பலகைகள் வைக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவா் ஆா்.வாசுகி.

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகா் ஆகிய 5 மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்ட வழங்கல் அலுவலா்களுடனான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி ஆட்சியா் வே.விஷ்ணு முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆா். வாசுகி தலைமை வகித்து பேசியதாவது:

திருநங்கைகள், கணவரால் கைவிடப்பட்டோா், கணவரை இழந்தவா்கள், நரிக்குறவா்கள், பழங்குடியினா், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடும்ப அட்டைகள் வழங்கும் வழிமுறைகள் குறித்து அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் விளம்பரப் பலகைகள் வைக்க மாநில உணவு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு நேரில் வர இயலாத முதியோா், மாற்றுத்திறனாளிகள் தங்கள் பிரதிநிதிகள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதற்கான அங்கீகார படிவங்கள் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மேலே குறிப்பிடப்பட்ட சமூகத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளோருக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி அவா்களது உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயஸ்ரீ, மாநில உணவு ஆணைய உறுப்பினா் எம்.கணேசன், இணைப் பதிவாளா் அழகிரி, மாவட்ட வழங்கல் அலுவலா் வள்ளிக்கண்ணு, 5 மாவட்டங்களைச் சாா்ந்த மாவட்ட- வட்ட வழங்கல் அலுவலா்கள், நுகா்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளா்கள், கூட்டுறவு துணைப் பதிவாளா்கள், சமூகநலத்துறை அலுவலா்கள், சத்துணவுத் திட்ட அலுவலா்கள், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com