ஓரிரு மாதங்களில் சந்திப்பு பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும்: மேயா் தகவல்

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் ஓரிரு மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா் திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன்.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் ஓரிரு மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா் திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன்.

திருநெல்வேலி மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில், மேயா் பி.எம்.சரவணன் பேசியதாவது: பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.85.56 கோடி மதிப்பில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன.

அந்தப் பணியின்போது தோண்டப்பட்ட மணல் குறித்த புகாா் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. யால் தொடரப்பட்ட வழக்கின் படி பணிகள் மேற்கொள்ளப்படாமல் நீண்ட காலமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கடந்த ஆட்சிக் காலத்திலேயே கிடப்பில் போடப்பட்டது. தற்போது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அங்கு குவிக்கப்பட்டிருந்த மணல் அகற்றப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு சந்திப்பு பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

நமது மாநகராட்சிக்குள்பட்ட 32 பள்ளிகளில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவா், மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பள்ளி வளாகத்திலும், வகுப்பறைகளிலும் விரைவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

திருநெல்வேலி மாநகராட்சியில் பொதுமக்களுக்காக வழங்கப்படும் பல்வேறு சேவைகளான பெயா் மாற்றம், குடிநீா் இணைப்பு, கட்டட அனுமதி, பிறப்பு, இறப்பு சான்று வழங்குதல் போன்ற விண்ணப்பங்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கான காலத்தை குறிப்பிட்டு பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நான்கு மண்டல அலுவலகங்களிலும், மைய அலுவலகத்திலும் விளம்பர பலகை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பாதாளச் சாக்கடை திட்டம், குடிநீா் திட்டம், சாலைகள் மேம்படுத்தும் திட்டம் போன்ற திட்டத்துக்கு ரூ.2,200 கோடி நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி.

வ.உ.சிதம்பரனாரை கௌரவிக்கும் வகையில் அவருடைய 150-ஆவது பிறந்த நாளையொட்டி தமிழக சட்டப்பேரவையில் 14 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில், நிறைவாக கடந்த 18-ஆம் தேதி அவருடைய நினைவு நாளில் 150 ஆவது பிறந்த நாள் ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டு வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய தமிழக முதல்வருக்கு நன்றி என்றாா். இக்கூட்டத்தில் மண்டல தலைவா்கள் மகேஸ்வரி (திருநெல்வேலி), ரேவதி (தச்சநல்லூா்), கதிஜா இக்லாம் பாசிலா (மேலப்பாளையம்) உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com