நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு: எடப்பாடி கே.பழனிசாமி

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றார்  தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி. 
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டத்தில் பேசும் எடப்பாடி பழனிசாமி.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டத்தில் பேசும் எடப்பாடி பழனிசாமி.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றார்  தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி. 

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய அனைவரும் பாடுபட வேண்டும். திருநெல்வேலி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். 

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கவர்ச்சிகரமான பொய்யான வாக்குறுதிகளை கூறி திமுக வெற்றி பெற்றது. திமுகவின் 8 மாத கால ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மக்களுக்கு என்ன நன்மை கிடைத்துள்ளது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்குத்தான் முதல்வர் ஸ்டாலின் இப்போது அடிக்கல் நாட்டு விழாவும், திறப்பு விழாவும் நடத்தி வருகிறார். திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த 200 அறிவிப்புகளை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் தமிழக மக்கள் எதுவுமே நடக்கவில்லை என புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். 

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்களை நிறைவேற்ற நிதியில்லை என்கிறது திமுக. தமிழகம் ஏற்கெனவே கடனில் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டுதானே தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்கள். தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்ய முடியவில்லை. 48 லட்சம் பேருக்கு 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தெரிவித்திருந்தது. ஆனால், இப்போது 13 லட்சம் பேர் மட்டுமே நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என கூறுகிறார்கள். எனவே, நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்த திமுகவுக்கு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். 

தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யாததால், மழையில் நனைந்து 3 லட்சம் நெல் மூட்டைகள் வீணாகியுள்ளன. இந்த விவகாரத்தில் எந்த விவசாயிகள் சங்கமும் குரல் கொடுக்கவில்லை. விவசாயிகளுக்காக அதிமுக மட்டுமே குரல் கொடுத்து வருகிறது.  நாங்கள் பொங்கல் பரிசாக ரூ.2,500 கொடுத்தபோது, ரூ.5,000 கொடுக்க வேண்டியதுதானே எனஅப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். ஆனால், இப்போது அவர் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக இருக்கிறபோது ஒரு பேச்சு பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். 

திமுக அரசு கொடுத்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் இருந்த பொருள்கள் தரமானதாக இல்லை. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது. கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழல் செய்த கட்சிதான் திமுக.  நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சிதான். அப்போது காங்கிரஸ் ஆட்சியில் திமுகவும் அங்கம் வகித்தது. நீட் தேர்வை தடுக்க குரல் கொடுத்தது அதிமுகதான்.  திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கையெழுத்திடுவேன் என்றார் ஸ்டாலின். ஏன் இதுவரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை.  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.  நீட் தேர்வை சட்டரீதியாக ரத்து செய்ய முயற்சிக்க வேண்டும். 

நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். மாறாக அதிமுக மீது பழிசுமத்தி திமுக தப்பிக்க முடியாது. 
நீட் தேர்வை தடுத்து நிறுத்த அதிமுக எவ்வளவோ முயற்சித்தது. ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக நீட் தேர்வை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம். நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை அதிமுக அரசு கொண்டு வந்தது. மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கும் என அரசாணை நிறைவேற்றப்பட்டது. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் 554 பேர் மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ளனர். 

திருநெல்வேலி மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டப் பணிகள் 35 சதவீதம் முடிந்துள்ளது. அந்தப் பணிகள் விரைவாக நடைபெற அதிமுகவைச் சேர்ந்தவர் மேயராக வருவதற்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும். இதேபோல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தலைவர்களாக வந்தால்தான் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியும். எனவே, அதிமுகவின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com