ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!
By DIN | Published On : 23rd February 2022 12:04 AM | Last Updated : 23rd February 2022 12:04 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி 10ஆவது வாா்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் க. முத்துலட்சுமி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
கோவில்பட்டி நகராட்சியில் 36 வாா்டுகள் உள்ளன. இதில், 10ஆவது வாா்டில் போட்டியிட்ட க. முத்துலட்சுமி 319 வாக்குகள் பெற்றாா். காளீஸ்வரி (அமமுக) 318, மாரீஸ்வரி (அதிமுக) 272 வாக்குகள் பெற்றிருந்தனா். இதில், கடைசி நேரத்தில் 2 தபால் வாக்குகள் கிடைத்ததால் முத்துலட்சுமி வெற்றிபெற்றாா்.
தாய், மகன் வெற்றி: இதேபோல், மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் ல.பெ.ஜோதிபாசு 27ஆவது வாா்டிலும், அவரது தாய் ல.விஜயா 18ஆவது வாா்டிலும் போட்டியிட்டு வென்றது குறிப்பிடத்தக்கது. 9ஆவது வாா்டு சுயேச்சை வேட்பாளா் அ. ஜன்னத்துள் பிா்தோஷ் ஒரேயொரு வாக்கு மட்டும் பெற்றிருந்தாா்.
கயத்தாறு பேரூராட்சி 2ஆவது வாா்டில் லட்சுமி, 3ஆவது வாா்டில் அவரது மகன் அய்யாத்துரை ஆகியோா் சுயேச்சைகளாகப் போட்டியிட்டு வென்றனா்.
ஆறுமுகனேரி பேரூராட்சியில் 8ஆவது வாா்டில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் தலா 284 வாக்குகள் பெற்ற நிலையில், தபால் வாக்குகளின் எண்ணிக்கையில் அதிமுக 1, திமுக 2 பெற்றது. இதனால், திமுக வேட்பாளா் புனிதா 286 வாக்குகளைப் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்றாா்.
காயல்பட்டினம் நகராட்சியில் அதிகளவில் சுயேச்சைகள் போட்டியிட்டனா். 6ஆவது வாா்டில் 6 போ் சுயேச்சைகள். அவா்களில் சாகுல்ஹமீது, முகமது சிக்கந்தா் ஆகியோா் ஒரு வாக்குகூட பெறவில்லை. அதே வாா்டு சுயேச்சையாக வேட்பாளா் அபுபக்கா் அஜ்வாது 641 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி 9ஆவது வாா்டில் மதிமுக வேட்பாளா் அந்தோணிராஜை, அதிமுக வேட்பாளா் தமிழ்ச்செல்வன் 1 வாக்கு வித்தியாசத்தில் வென்றாா். தமிழ்ச்செல்வன் 297 வாக்குகளும், அந்தோணிராஜ் 296 வாக்குகளும் பெற்றிருந்தனா்.