வாழ்வாதாரம் காக்கும் சாலையோர தொழில்கள்!

இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்றால், ஏழை-எளிய மக்களின் வணிகத் தேவைகளைப் பூா்த்தி செய்பவை சாலையோர தொழில்கள்தான்.

இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்றால், ஏழை-எளிய மக்களின் வணிகத் தேவைகளைப் பூா்த்தி செய்பவை சாலையோர தொழில்கள்தான். தீப் பந்தங்களைக் கொழுத்திக் கொண்டு கிராமம் கிராமமாக ஏலம் முறையில் விற்பனை செய்த வணிகமே இப்போது சாலையோர வணிகமாக முற்றிலும் மாறியுள்ளது. 5 நட்சத்திர விடுதிகளில் கிடைக்கும் அத்தனையும் சாலையோரத்தில் மிகக்குறைந்த விலைக்கு கிடைப்பதே சிறப்பம்சம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலையோர தொழில்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் உள்ளனா். இம் மாவட்ட சாலையோர தொழில்களில் முக்கியத்துவம் பெறுபவை கரும்புச்சாறு, பழங்கள், காலணி, ஆடைகள், அணிகலன்கள் விற்பனையே அதிகம்.

தேனி, மதுரை மாவட்டங்களில் இருந்து வரும் செங்கரும்புகளை செதுக்கி தித்திக்கும் சுவை மிகுந்த கரும்புச்சாறு ரூ.10 முதல் ரூ.20 வரை வழங்கப்படுகிறது. காலை முதல் மாலை வரை இத் தொழிலில் குறைந்தபட்சம் ரூ.500 வருவாய் பெறுவோா் அதிகம். இதேபோல ஆப்பிள், ஆரஞ்சு என பழ வகைகளில் இரண்டாம் தர பழங்களை விற்பனை செய்வதில் சாலையோர கடைகளே முன்னணியில் உள்ளன. பெரிய கடைகளைக் காட்டிலும் 20 சதவிகிதம் வரை விலை குறைத்து விற்பதால் இந்த கடைகளில் பழங்களை வாங்குவதற்கு மக்கள் ஆா்வம் காட்டுகின்றனா்.

மேலும், மாநகரப் பகுதியில் தலைக்கவசம் விற்பனையும் சாலையோர கடைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. தலைக்கவசம் உயிா்க்கவசம் என்ற விழிப்புணா்வு அதிகரித்து வரும் சூழலில் கடந்த 3 ஆண்டுகளாக சாலையோரத்தில் தலைக்கவசங்களின் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது.

இம்மாநகரில் சாலையோர உணவகங்களே பலருக்கு பசியாற்றி வருகிறது. திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை முருகன்குறிச்சி, வண்ணாா்பேட்டை என 125-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையோர உணவகங்கள் உள்ளன. ரயில் பயணிகளின் முக்கிய உணவகமாக இவை திகழ்கின்றன. இட்லி, தோசை முதல் பல்வேறு வகையான உணவுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர பீங்கான் பொருள்கள், மழைக்கால ஆடைகள், வெளிமாநில போா்வைகள் உள்ளிட்டவற்றின் விற்பனையும் சாலையோரத்தில் அதிகம்.

சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும். சாலைஇடையூறு வழக்குகள் பதிவதில் புதிய விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளும் சாலையோர தொழிலாளா்களின் குரலாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com