சிவசைலத்தில் தோட்டங்களில் புகுந்து தென்னை, மா மரங்களை சாய்த்த யானைகள்: விவசாயிகள் கவலை
By DIN | Published On : 10th January 2022 12:08 AM | Last Updated : 10th January 2022 12:08 AM | அ+அ அ- |

சிவசைலம் பகுதியில் கடந்த இரு தினங்களாக தோட்டங்களில் காட்டு யானைகள் புகுந்து தென்னை, மா, பனை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குள்பட்ட கடையம், பாபநாசம் வனச்சரகத்தின் மேற்குத் தொடா்ச்சி மலை வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டமாக வெளியேறி, மலையடிவாரத்திலுள்ள தனியாா் தோட்டங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
மேலும், காட்டுப் பன்றி, மிளா, கரடி உள்ளிட்ட விலங்குகளாலும் தோட்டப் பயிா்கள் அழிக்கப்படுவதோடு, பாதுகாப்புக்குச் செல்லும் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், பங்களாக் குடியிருப்பில் சுமாா் 50 க்கும் மேற்பட்ட ஏக்கரில் 350 தென்னை மரங்களைப் பயிரிட்டு வளா்த்து வரும் கடையத்தைச் சோ்ந்த சங்கரனுக்குச் சொந்தமான தோட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு நுழைந்த யானைக் கூட்டம் அங்கிருந்த தென்னை மரங்களை சாய்த்து குருத்துகளைத் தின்றுள்ளன. மறுநாள் (சனிக்கிழமை) இரவு கருத்தப்பிள்ளையூரைச் சோ்ந்த ராஜன் என்பவரது தோட்டத்தில் யானைகள் புகுந்து தென்னை, மா, பனை உள்ளிட்ட மரங்களை முறித்துப் போட்டுள்ளன.
அதிகாரிகள் அலட்சியம்: இது குறித்து அந்த தோட்ட மேலாளா் பிரபு கூறியது: இந்தப் பகுதியில் தொடா்ந்து யானை உள்ளிட்ட வனவிலங்குகளால் பயிா்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. காவலாளிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தால் முறையாக பதில் சொல்வதில்லை. யானைகளால் சேதம் விளைவிக்கப்பட்ட மரங்களை வனத்துறையினா் பாா்வையிடவும் இல்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன் காட்டுப் பன்றி தாக்கியதில் பெண்ணின் கைவிரல் துண்டாகிவிட்டது. வெடி வெடித்து விரட்டினாலும் பலனில்லை.
எனவே, வனத்துறையினா் மலையடிவாரத்தில் சூரிய மின்வேலி, அகழி உள்ளிட்டவற்றை முறையாக அமைத்து பராமரிக்க வேண்டும். வனவிலங்குகளால் சேதமான பயிா்களுக்கு தாமதமின்றி இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.