தை அமாவாசை: தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தை அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
பாபநாசம் அய்யா கோயில் பகுதியில் புனித நீராடும் பக்தர்கள்.
பாபநாசம் அய்யா கோயில் பகுதியில் புனித நீராடும் பக்தர்கள்.

தை அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

தை அமாவாசை, ஆடி அமாவாசை நாள்களில் பொதுமக்கள் புனித நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடன் தீர்ப்பது வழக்கம். இதையடுத்து பாபநாசம் தாமிரவருணி நதியில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணி முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்களும், பக்தர்களும் பாபநாசத்தில் குவிந்தனர். 

திருநெல்வேலி, தென்காசி, கோயம்பத்தூர், விருதுநகர், திருச்சி, சென்னை, மதுரை, தஞ்சாவூர், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் குடும்பத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரவருணியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பாபநாசம் சிவன் கோயிலில் வழிபட்டனர். 

தை அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் கோயிலில் சாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. கரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக பாபநாசம் கோயில் படித்துறையில் பக்தர்கள் நீராடி தர்ப்பணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. மாறாக யானைப்பாலம், அய்யா கோயில் படித்துறை பகுதிகளில் நீராடி தர்ப்பணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் டாணா சந்திப்பில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இரு சக்கர வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. 

காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் பாதுகப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுவதையடுத்து காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் சொரிமுத்து அய்யனார் கோயிலில் வழிபடமுடியாத நிலை ஏற்பட்டது. 

மேலும் தை அமாவாசையை முன்னிட்டு அம்பாசமுத்திரம், சிவந்திபுரம், கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர், சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் உள்ள தாமிரவருணிப் படித்துறைகளிலும், கடையம் ராமநதி மற்றும் ஆம்பூர் கடனாநதி கரைகளிலும் ஏராளமானோர் தை அமாவாசையை முன்னிட்டு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com