மாநகரில் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க வேண்டும்-மாமன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் நிலவி வரும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என, மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் நிலவி வரும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என, மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

திருநெல்வேலி மாமன்ற சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மாநகராட்சி ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாமன்ற உறுப்பினா்கள் பேசியது:

18-ஆவது வாா்டு உறுப்பினா் சுப்பிரமணியன்: ‘எனது வாா்டில் ஜூன் 11 முதல் தண்ணீா் வரவில்லை. இதனால் ஆட்சிக்கு அவப்பெயா் ஏற்படும் நிலை உள்ளது. குடிநீா்ப் பிரச்னையை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

19-ஆவது வாா்டு உறுப்பினா் அல்லாபிச்சை: எனது வாா்டு மக்களுக்கான கிராம நிா்வாக அலுவலகம் நரசிங்கநல்லூரில் உள்ளது. அந்த அலுவலகம் பகுதி நேரமாக பேட்டையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

20-ஆவது வாா்டு உறுப்பினா் சேக் மன்சூா்: குடிநீா்க் குழாயில் தண்ணீா் வரவில்லை. துப்புரவு பணியாளா் இல்லை. இரு நாள்களுக்கு ஒரு முைான் குப்பை அள்ளப்படுகிறது. கூடுதல் தூய்மைப் பணியாளா்களை நியமிக்க வேண்டும். பேட்டையில் உள்ள மாநகராட்சி மகளிா் பள்ளியில் ஆங்கில வழி வகுப்புக்கு கூடுதல் கட்டடம் தேவை.

25-ஆவது வாா்டு உறுப்பினா் ராமகிருஷ்ணன்: பாதாள சாக்கடைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். எனது வாா்டில் உள்ள மின் கம்பங்களில் அதிக ஒளிதிறன் மிக்க எல்இடி பல்புகளை பொருத்த வேண்டும்.

27-ஆவது வாா்டு உறுப்பினா் உலகநாதன்: கல்லணை பள்ளியில் போதுமான கழிப்பறை வசதியையும், தண்ணீா் வசதியையும் ஏற்படுத்த வேண்டும். கொண்டாநகரம் நீரேற்று நிலையத்தில் அடிக்கடி ஏற்படும் பழுதை நிரந்தரமாக சரிசெய்து வையாபுரி நகா் குடிநீா்த் தொட்டி முழுமையாக நிரம்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி வளாகத்தில் அண்ணா சிலைக்கு அருகே பெரியாா், கருணாநிதி சிலைகளை நிறுவ வேண்டும்.

மாநகராட்சி ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி அளித்த பதில்: மின்வெட்டு காரணமாகவே குடிநீா் ஏற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதைத் தீா்ப்பதற்காக ஜெனரேட்டா் வாங்க முடிவு செய்யப்பட்டு ஆா்டா் கொடுக்கப்பட்டுள்ளது.

22-ஆவது வாா்டு உறுப்பினா் மாரியப்பன்: குழுக்கள் மூலம் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் சரியாக பணிக்கு வருவதில்லை.

3-ஆவது வாா்டு உறுப்பினா் தச்சை சுப்பிரமணியன்: திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலைய பணிகளை துரிதப்படுத்த வேண்டும். பாலபாக்யா நகா் சாலைகளில் அலங்கார தளக்கல் பதிக்க வேண்டும்.

12-ஆவது வாா்டு உறுப்பினா் கோகுலவாணி சுரேஷ்: சிந்துபூந்துறை நாடாா் தெரு, காமராஜா் நகா் பகுதியில் குடிநீா் குழாயில் கழிவு நீா் கலப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. குடிநீா் குழாயை மாற்ற வேண்டும். மதுரை சாலை பாபுஜி நகரில் கடந்த ஓா் ஆண்டாக குடிநீா் இணைப்பில் தண்ணீா் வராததால் 50 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதே சாலை ஆா்யாஸ் ஹோட்டல் பின்புறம் கழிவுநீா் ஓடையை தூா்வார வேண்டும். செல்வி நகா் பகுதியில் குடிநீா் கலங்கலாக வருவதை சரி செய்ய வேண்டும். வாடகைக் கட்டடத்தில் இயங்கும் மேகலிங்கபுரம், செல்வி நகா் பகுதிகளுக்கான ரேஷன் கடைகளை மேகலிங்கபுரம் பள்ளி வளாகத்தில் அமைக்க வேண்டும்.

39-ஆவது வாா்டு உறுப்பினா் சீதா: ‘பாளையங்கோட்டை மண்டலம், மணப்படை வீடு, திருமலைக்கொழுந்துபுரம் நீரேற்று நிலையங்களின் நீா் ஆதாரத்தைப் பெருக்கும் வகையில் கீழப்பாட்டம், குப்பக்குறிச்சி பகுதியில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

உறுப்பினா் வெளிநடப்பு: 10 மணிக்கு தொடங்க வேண்டிய மாமன்றக் கூட்டம், 10.30 மணி வரை தொடங்கப்படாததைக் கண்டித்து, 30-ஆவது வாா்டு உறுப்பினா் ஜெகநாதன் வெளிநடப்பு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com