வெயில் அதிகரிப்பு: செங்கல், மண்பாண்ட உற்பத்தி தீவிரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் செங்கல், மண்பாண்ட பொருள்களின் உற்பத்தி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் செங்கல், மண்பாண்ட பொருள்களின் உற்பத்தி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம், பொட்டல், பூதத்தான்குடியிருப்பு, பணகுடி, சீவலப்பேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செங்கல் உற்பத்தி நடைபெறுகிறது. காருக்குறிச்சி, மாவடி, குறிச்சி, பொன்னாக்குடி பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட வகையிலான மண்பாண்ட பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத் தொழிலை நம்பி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் உள்ளனா். வடகிழக்கு பருவமழை முடிந்து தை மாதத்தில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கும் செங்கல் சூளைகளில், வைகாசி இறுதி வரை வேகமாக செங்கல் உற்பத்தி நடைபெறும். வைகாசிக்கு பின்பு சாரல் மற்றும் தென்மேற்கு பருவமழையால் உற்பத்தி பாதிக்கும்.

நிகழாண்டில் கேரளத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், அது தீவிரமடையாததால் ஜூன் மாதத்தில் தொடங்கும் குற்றால சீசன் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அக்னிநட்சத்திரம் முடிந்த பின்பும் இம்மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நீடித்து வருகிறது. கடந்த சில தினங்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் செங்கல், மண்பாண்ட உற்பத்தி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு உதவ வேண்டும்: இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளா்கள் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பிரியாணி சட்டி, குழம்பு சட்டி உள்ளிட்ட மண்பாண்டங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதுதவிர கட்டடத்திற்கு தேவையான செங்கலை உற்பத்தி செய்வதிலும் இம் மாவட்டம் தன்னிறைவு மாவட்டமாக உள்ளது.

ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்பட்சத்தில் செங்கல், மண்பாண்ட உற்பத்தி மிகவும் பாதிக்கப்படும். அதனால் இறுதிக்கட்ட உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறோம். மண்பாண்ட உற்பத்திக்கும், செங்கல் சூளைகளுக்கும் மண் கிடைப்பதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன.

கடந்த ஆட்சியின்போது குடிமராமத்து திட்டம் உள்ளிட்டவற்றில் நீா்நிலைகளைத் தூா்வாரும்போது ஓரளவு மண் கிடைத்தது. அரசுக்கும் வருவாய் கிடைத்தது. அதுபோன்று திட்டங்களை உருவாக்கி குறைந்த விலையில் மூலப்பொருளான மண் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.

மேலும், செங்கல் மற்றும் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ள 60 வயதை கடந்த தொழிலாளா்களுக்கு கட்டட தொழிலாளா் நலவாரியத்தின் கீழ் கிடைப்பது போல ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை அரசு வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com