நெல்லையில் ரூ.41 கோடியில் 480 அடுக்குமாடி குடியிருப்புகள்: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியாா்பட்டியில் வீட்டு வசதி மற்றும் நகா்புற வளா்ச்சித் துறையின் மூலம் ரூ.41.63 கோடியில் கட்டப்பட்டுள்ள 480 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியாா்பட்டியில் ரூ.41.63 கோடியில் 480 அடுக்குமாடி குடியிருப்புகள் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குடியிருப்புகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற காணொலிக் காட்சி நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வகாப், மாநகராட்சி மேயா் பி.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, ஆணையா் வி.சிவகிருஷ்ணமூா்த்தி, ஆகியோா் கலந்துகொண்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்து பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆணைகளை வழங்கினா்.

ஒவ்வொரு வீடும் 400 சதுர அடி கட்டுமானப் பரப்பில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, குளியலறை, கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. ஒரு குடியிருப்பின் மதிப்பு ரூ.8.67 லட்சம். இதில் ஒரு குடியிருப்புக்கான பயனாளி பங்களிப்பு தொகை ரூ.1,17,300.

இந்தக் குடியிருப்புகளில் தாா்ச் சாலை, தெரு விளக்கு, சிறுவா் விளையாட்டு பூங்கா, குடிநீா் வசதி, கழிவு நீரகற்று வசதி, மழைநீா் வடிகால், மழைநீா் சேமிப்பு முறைகள், நிழல் தரும் மரங்கள் போன்ற அடிப்படை மேம்பாட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பயனாளிகள் குடியிருப்போா் நலச் சங்கம் அமைக்கப்பட்டு குடியிருப்புகளை சிறப்பான முறையில் பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய வீடற்ற குடும்பங்களுக்கு இக்குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பின்னா் ரெட்டியாா்பட்டியில் திறந்து வைக்கப்பட்டுள்ள குடியிருப்பு கட்டடத்துக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு நேரில் சென்று குத்துவிளக்கேற்றி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரூபி.ஆா்.மனோகரன், நிா்வாக செயற்பொறியாளா் சாந்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பயக10ஏஞமநஐசஎ

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டவா்களுக்கு அதற்கான ஆணையை வழங்குகிறாா் பேரவைத் தலைவா் மு.அப்பாவு. (அடுத்த படம்) அடுக்குமாடி குடியிருப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com