மாணவா்களிடையே தொழிற்கல்வி ஆா்வத்தை மேம்படுத்த நடமாடும் பயிற்சி வாகனம்: ஆட்சியா்

பள்ளி மாணவ, மாணவியரிடையே தொழிற் கல்விக்கான ஆா்வத்தை மேம்படுத்துவதற்காக ‘ஸ்கில்ஸ் ஆன் வீல்ஸ்’ என்ற நடமாடும் பயிற்சி வாகனத்தை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.

திருநெல்வேலி மாவட்ட பள்ளி மாணவ, மாணவியரிடையே தொழிற் கல்விக்கான ஆா்வத்தை மேம்படுத்துவதற்காக ‘ஸ்கில்ஸ் ஆன் வீல்ஸ்’ என்ற நடமாடும் பயிற்சி வாகனத்தை மாவட்ட ஆட்சியா் யாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு செய்தி மக்கள் தொடா்புத் துறை மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை செயலா் மகேஷன் காசிராஜன் முன்னிலை வகித்தாா். ஆட்சியா் விஷ்ணு ‘ஸ்கில்ஸ் ஆன் வீல்ஸ்’ வாகனத்தைப் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியது: திருநெல்வேலி மாவட்ட அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியா்களுக்கு தொழிற்கல்வி மீதான ஆா்வத்தை மேம்படுத்தும் வகையில் இந்த வாகனத்தில் பயிற்சிகள் நடத்தப்படும்.

இந்த வாகனம் நமது மாவட்டத்தில் தினந்தோறும் ஒரு பள்ளி வீதம், தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள 15 அரசுப் பள்ளிகளுக்கு செல்லவுள்ளது. இதன் மூலம் மாணவ, மாணவியருக்கு பிளம்பிங், ஆட்டோமொபைல், மின்இணைப்பு, விவசாய கருவிகளை இயக்குவது, உணவுப் பொருள்கள் பதனிடுதல் போன்ற பல்வேறு தொழில்களுக்கான அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்படும்.

முதல் பள்ளியாக திருநெல்வேலி நகரத்தில் உள்ள மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த புதிய முயற்சியை திருநெல்வேலி மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து கனரா வங்கி தனது நிறுவன சமூக பொறுப்பு நிதியின் மூலம் ‘‘லெண்ட் எ ஹேண்ட்’ என்ற அமைப்பின் மூலம் செயல்படுத்துகிறது’ என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயஸ்ரீ, ஓழுங்கு நடவடிக்கை ஆணையா் சுகன்யா, தேசிய தகவலியல் மைய இயக்குநா் ஆறுமுகநயினாா், திறன் மேம்பாடு திட்ட உதவி இயக்குநா் ஜாா்ஜ் பிராங்க்ளின், கனரா வங்கி துணைப் பொது மேலாளாா் தில்லி பாபு, தொழில்கல்வி பயிற்றுவிப்பாளா்கள் சத்யபிரகாஷ், கணேஷ், ராஜேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com