2 ஆண்டுகளுக்குப் பின் கோயில்களில் அனுமதி: குலதெய்வக் கோயில்களில் குடும்பத்துடன் குவிந்த பக்தர்கள்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் குலதெய்வக் கோயில்களில் பக்தர்கள் குடும்பத்துடன் வழிபட்டனர். 
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதி தாமிரவருணியில் புனித நீராடும் பக்தர்கள்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதி தாமிரவருணியில் புனித நீராடும் பக்தர்கள்.

அம்பாசமுத்திரம்: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் குலதெய்வக் கோயில்களில் பக்தர்கள் குடும்பத்துடன் வழிபட்டனர். 

ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று குலதெய்வக் கோயில்களில் சென்று குடும்பத்துடன் வழிபடுவது வழக்கம். கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் விழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த இரண்டு மாதங்களாக கோயில்களில் வழிபடுவதற்கு அரசு அனுமதியளித்ததையடுத்து வெள்ளிக்கிழமை குலதெய்வக் கோயில்களில் பக்தர்கள் குடும்பத்துடன் சென்று வழிபட்டனர்.

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலை குலதெய்வமாகக் கொண்டவர்களும், குல தெய்வம் தெரியாதவர்களும் பங்குனி உத்திரத்தன்று சொரிமுத்து அய்யனார் கோயிலில் குடும்பத்துடன் வந்து பொங்கலிட்டு வழிபடுவர். 

பாபநாசம் வனப்பகுதியிலும் இரண்டு ஆண்டுகளாக அனுமதியில்லாத நிலையில், நிகழாண்டு பங்குனி உத்திரத்திற்கு சொரிமுத்து அய்யனார் கோயிலில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கினர். இதையடுத்து, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள்,  குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் வந்து பொங்கலிட்டு வழிபட்டுச் சென்றனர். 

காலை 8 மணி முதல் மாலை 3 மணிவரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு மாலை 5 மணிக்குள் வெளியேற அறிவுறுத்தப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பக்தர்கள் சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் நீராட அனுமதிக்கப்பட்டதையடுத்து, பக்தர்கள் குழந்தைகளுடன் ஆற்றில் நீராடி கோயிலில் வழிபட்டனர். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநர் செண்பகப்ரியா தலைமையில் அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை, கடையம் வனச்சரகங்களிலிருந்து வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மற்றும் காவல்துறையினர்  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com