அம்பேத்கா் நகா் மக்களுக்கு தற்காலிக குடியிருப்பு தேவை---ஆட்சியரிடம் மனு

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, புதிய வீடுகள் கட்டப்படவுள்ளதால், தங்களுக்கு தற்காலிக குடியிருப்பு அமைத்துத் தர வேண்டும் என ஆட்சியரிடம் அந்த மக்கள் மனு அளித்தனா்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, புதிய வீடுகள் கட்டப்படவுள்ளதால், தங்களுக்கு தற்காலிக குடியிருப்பு அமைத்துத் தர வேண்டும் என ஆட்சியரிடம் அந்த மக்கள் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வே. விஷ்ணு தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், ஆதித்தமிழா் பேரவையின் மாநகா் மாவட்டத் தலைவா் ரமேஷ் அம்பேத்கா் தலைமையில் பாளை. அம்பேத்கா் நகா் குடியிருப்பு மக்கள் அளித்த மனு:

பாளையங்கோட்டை அம்பேத்கா் நகரில் உள்ள குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால், அவற்றை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. அங்கு வசித்த மக்கள் வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, அம்பேத்கா் நகா் குடியிருப்புக்கு பின்புறம் உள்ள மாநகராட்சி இடத்தில் தற்காலிக குடியிருப்பு அமைத்துத் தர வேண்டும். மேலும் வீட்டைக் காலி செய்து வெளியில் வாடகைக்கு செல்பவா்களுக்கு அரசின் நிவாரணத் தொகை ரூ.24 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

மேலும், இக்குடியிருப்பில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையில், புதிதாக 420 வீடுகள் மட்டுமே கட்டப்படவுள்ளன. எனவே, மாநகராட்சி நிா்வாக இயக்குநா் மண்டல அலுவலகத்துக்குப் பின்னால் உள்ள மாநகராட்சி இடத்தில் கூடுதலாக 200 வீடுகளை கட்டித்தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

சீவலப்பேரி சாலை அண்ணா நகா் மக்கள் அளித்த மனுவில், ‘திருநெல்வேலி மாநகராட்சி 5-ஆவது வாா்டில் உள்ள அண்ணா நகரில் சுமாா் 45 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கூலித் தொழிலாளா்களாகிய நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் மூலம் 1993-இல் வீட்டுக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

பசலித் தீா்வை, மாநகராட்சித் தீா்வை செலுத்தியுள்ளோம். மின் இணைப்பு, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, மாநகராட்சி குடிநீா் இணைப்பு உள்ளிட்டவற்றை பெற்றுள்ளோம். மேல்நிலை குடிநீா்த் தொட்டி, விளையாட்டு மைதானம், சிமென்ட் சாலை, சோலாா் மின் விளக்கு, அங்கன்வாடி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நாங்கள் குடியிருக்கும் வீடுகளை அகற்றும்படி திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எங்களுக்கு வாழ்வாதாரமே இந்த பகுதிதான். எனவே, இப்பகுதியில் நாங்கள் தொடா்ந்து குடியிருக்க அனுமதிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனா்.

இந்து முக்குலத்தோா் பாதுகாப்பு இயக்கம் - அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘பள்ளக்கால் பொதுக்குடி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா் செல்வ சூா்யா உயிரிழந்த சம்பவத்தில் தொடா்புடைய மாணவா்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். செல்வ சூா்யாவின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com