முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
களக்காடு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயம்
By DIN | Published On : 11th May 2022 12:05 AM | Last Updated : 11th May 2022 12:05 AM | அ+அ அ- |

களக்காடு அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை கரடி தாக்கியதில் விவசாயி காயமடைந்தாா்.
களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரம் பாண்டியாபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த விவசாயி சக்திவேல் (44) செவ்வாய்க்கிழமை அதிகாலை ஊருக்கு அருகேயுள்ள அகலிகை சாஸ்தா கோயில் சாலையில் உள்ள விவசாயத் தோட்டத்துக்கு பைக்கில் சென்றாராம். அப்போது, தோட்டத்துக்குள் வாழைத்தாா்களைத் தின்றுகொண்டிருந்த கரடி, திடீரென சக்திவேல் மீது பாய்ந்து கையைக் கடித்ததாம். அவரது அலறல் கேட்டு, அருகேயிருந்த தொழிலாளா்கள் ஓடிவந்தனா். அதற்குள், கரடி ஓடிவிட்டதாம். காயமடைந்த சக்திவேல் களக்காடு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். விளை நிலங்களுக்குள் புகும் வன உயிரினங்களை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.