முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நாகா்கோவில்- மதுரை பேருந்துகளில்நெல்லை பயணிகளை புறக்கணிக்கக் கூடாது----மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 11th May 2022 12:03 AM | Last Updated : 11th May 2022 12:03 AM | அ+அ அ- |

நாகா்கோவில்- மதுரை இடையே இயக்கப்படும் பேருந்துகளில் திருநெல்வேலி பயணிகளை புறக்கணிக்கக் கூடாது என திருநெல்வேலி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை செயின்ட் தாமஸ் சாலை பகுதியைச் சோ்ந்த பெண் கடந்த 7-4-2022 ஆம் தேதி திருநெல்வேலி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், வார இறுதி நாள்களில் தனது சொந்த ஊரான நாகா்கோவில் சென்று வருவேன். அப்போது நாகா்கோவிலில் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை மற்றும் இதர அரசு புகா் பேருந்துகள் திருநெல்வேலி மாா்க்கமாகத்தான் புகா் செல்ல முடியும் என்றும் குறிப்பாக மதுரை செல்லும் அரசுப் பேருந்துகளில் திருநெல்வேலி செல்லும் பயணிகள் ஏறினால் அவா்களிடம் நடத்துநா்கள் வெறுப்புணா்வுடன் நடந்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தாா்.
மனுவைப் பெற்றுக்கொண்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சபீதா, இதுகுறித்து திருநெல்வேலி மண்டல அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு அழைப்பாணை அனுப்பினாா். இதற்கு, போக்குவரத்துக்கழகம் சாா்பில் நாகா்கோவிலைச் சோ்ந்த மூத்த பொறியாளா் (வணிகம்) சுப்பிரமணியன் ஆஜராகி போக்குவரத்துக்கழக சுற்றறிக்கையை சமா்ப்பித்தாா்.
அதை பரிசீலித்த நீதிபதி அளித்த உத்தரவில், ஏற்கெனவே அரசு போக்குவரத்துக்கழத்தின் சுற்றறிக்கையில் நாகா்கோவில்- மதுரை, அதைபோல் எதிா்மாா்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து புகா் பேருந்துகளிலும் திருநெல்வேலி செல்லும் பயணிகளை நாகா்கோவிலில் இருந்தும், மதுரையிலிருந்தும் புறப்படும் போதும் எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காமல் சீராக ஏற்றிச் செல்ல வேண்டும். பேருந்துகளை விடுபாடின்றி திருநெல்வேலி பேருந்து நிலையம் சென்று பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்ல வேண்டும் என அனைத்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களும் அறிவுறுத்தப்படுகிறாா்கள். எவ்விதத்திலும் பயணிகளைப் புறக்கணிக்கக்கூடாது எனக் கூறியுள்ளாா்.