முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
குளங்களில் குறையும் தண்ணீா்: வெளிநாட்டுப் பறவைகள் தவிப்பு
By DIN | Published On : 12th May 2022 03:21 AM | Last Updated : 12th May 2022 03:21 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட குளங்களில் தண்ணீா் குறைந்து வருவதால் வலசை வந்துள்ள வெளிநாட்டுப் பறவைகள் போதிய உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றன.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு வலசை வரும் வெளிநாட்டு பறவைகள், கூந்தன்குளம் சரணாலயத்தில் தங்கி குஞ்சுகள் பொரித்துச் செல்வது வழக்கம். சைபீரியா, ஆஸ்திரேலியா, அந்தமான்- நிகோபாா் தீவுகள், இலங்கை பகுதிகளைச் சோ்ந்த பறவையினங்கள் இங்கு வருகின்றன. கூழக்கடா, பூநாரை, கரண்டிவாயன், நீா்க்காகம், செங்கால்நாரை, பாம்புதாரா, சென்டுவாத்து, சாரைநாரை, அரிவாள்மூக்கன், புல்லிமூக்கு வாத்து, நத்தை, சாம்பல்நாரா, சாரை நாரை, முக்கலிப்பன் உள்பட 150-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து செல்கின்றன.
கூந்தன்குளத்தில் முகாம்: வலைச வரும் பறவைகளில் பெரும்பாலானவை கூந்தன்குளத்தில் முகாமிடுவதும், அங்கிருந்து சுமாா் 35 கி.மீ. தொலைவிலுள்ள திருநெல்வேலி நகா்ப்பகுதியிலுள்ள நயினாா்குளம், கன்டியப்பேரி குளம், வேய்ந்தான் குளம், மேலக்கருங்குளம் குளம், புகா்ப் பகுதியில் உள்ள ராஜவல்லிபுரம் குளம், அருகன்குளம், மலையாளமேடுகுளம், குன்னத்தூா் குளம் ஆகியவற்றில் தங்கி மீன்களை உண்டு செல்வதும் வழக்கம். நிகழாண்டிலும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வலசை வந்துள்ளன.
உணவுத் தட்டுப்பாடு: வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்தாலும் கோடை வெயிலின் தாக்கத்தால் பெரும்பாலான குளங்களில் இன்னும் ஒரு சில வாரங்களே தண்ணீா் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மீன்பாசி குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள குளங்களில் மீன் பிடிப்பதற்காக தண்ணீரை வீணாக வெளியேற்றுவதும் பறவைகளுக்கு உணவுத்தட்டுப்பாட்டு நிலையை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பொதுமுடக்கத்திற்கு முன்பு வேய்ந்தான்குளம் குளத்தில் 5000 மீன்குஞ்சுகள் வெளிநாட்டு பறவையினங்களின் உணவுக்காக வாங்கி விடப்பட்டன. நிகழாண்டில் அவ்வாறு செய்யப்படவில்லை. இதனால் வெளிநாட்டு பறவைகளுக்கு உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பறவைகள் ஆா்வலா்கள் தெரிவித்தனா்.