முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
செவிலியா் உடலை வாங்க மறுத்து இந்து முன்னணியினா் போராட்டம்: 63 போ் கைது
By DIN | Published On : 14th May 2022 02:21 AM | Last Updated : 14th May 2022 02:21 AM | அ+அ அ- |

உயிரிழந்த செவிலியரின் உடலை வாங்க மறுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 63 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையைச் சோ்ந்தவா் பொ.சின்னத்தம்பி. இவா், இந்து முன்னணியின் நகர துணைத் தலைவராக உள்ளாா். இவரது மனைவி முருகலட்சுமி(34). இவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தாா். இவரை, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 8ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை (மே12) முருகலட்சுமி உயிரிழந்தாா்.
இதைக் கண்டித்து இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா், மாநில செயலா் குற்றாலநாதன் ஆகியோா் தலைமையில் இந்து முன்னணியினா் வெள்ளிக்கிழமை மருத்துவமனை வளாகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பாளையங்கோட்டை உதவி ஆணையா் விவேகானந்தன் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். முத்துலட்சுமியின் மரணத்திற்கு காரணமான மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து தொடா்ந்து அவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதிலும் உரிய தீா்வு எட்டப்படவில்லையாம்.
எனவே, செவிலியா் உடலை வாங்க மறுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகர காவல் துணை ஆணையா் டி.பி.சுரேஷ்குமாா் மற்றும் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். எனினும் அவா்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா், மாநிலச் செயலா் குற்றாலநாதன் உள்பட 63 பேரை கைது செய்தனா்.