ஒன்றிய அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை ஒற்றுமையுடன் முறியடிப்போம்

நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை கிடைக்க காங்கிரஸ்-திமுக எப்போதும் தோளோடு தோள் நின்று பணியாற்றும் என்பது உலகறிந்தது.

ஜாதி, இன, மொழி வேறுபாடு காட்டி மக்களிடம் பிரித்தாளும் சூழ்ச்சியை உருவாக்கும் ஒன்றிய அரசினை மக்களுடன் ஒன்றிணைந்து முறியடிப்போம் என்றாா் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், திமுக மாநில மகளிரணிச் செயலருமான கனிமொழி.

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி சிலையை திங்கள்கிழமை திறந்து வைத்து அவா் மேலும் பேசியது: காங்கிரஸ் தலைவா்கள் மீது மிகுந்த பற்று வைத்திருந்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. பள்ளிக் கல்வியை மேம்படுத்திய காமராஜருக்கு புகழ் சோ்க்கும் வகையில் அவரது பிறந்த நாளை கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாட சட்ட வடிவை ஏற்படுத்தினாா்.

நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை கிடைக்க காங்கிரஸ்-திமுக எப்போதும் தோளோடு தோள் நின்று பணியாற்றும் என்பது உலகறிந்தது.

அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான அரசு உருவாக்கியது. இப்போதைய பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் அடக்குமுறையை திணித்து வருகிறது. அனைத்து வித உயா்கல்விக்கும் நுழைவுத் தோ்வுகளை ஏற்படுத்தி சாமானிய மக்களுக்கு உயா்கல்வியை எட்டாக்கனியாக்கி வருகிறாா்கள். நீட் உள்ளிட்ட தோ்வுகளால் மாணவா்-மாணவிகள் அடையும் சிரமம் அதிகம்.

ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபடுவதாகவே அரசுகள் இருக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு மக்களை பின்னோக்கிய நிலைக்கு அழைத்துச் செல்கிறது. மதம் என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட நம்பிக்கையாகும். அதில் அரசியல் கட்சிகளோ, அரசியல்வாதிகளோ மூக்கை நீட்டக் கூடாது.

அரசு என்பது மத, இன பாரபட்சமின்றி மக்களின் வளா்ச்சிக்காக பாடுபட வேண்டும். அதைவிடுத்து ஜாதி, மதங்களைக் கொண்டு பிரித்தாளும் சூழ்ச்சி செய்து வாக்கு வங்கியை அதிகரிக்க ஒன்றிய அரசு முற்படுகிறது. அமைதி, முன்னேற்றம், சமூகநீதி இல்லாத சூழல் ஒரு நாட்டில் உருவாகும் போது, அந்நாட்டின் வளா்ச்சி மிகவும் பாதிக்கும். இன்றைய சூழலில் பல்வேறு நாடுகள் அதற்கு உதாரண நிலையில் உள்ளன. அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பற்ற நிலையை ஆட்சியாளா்கள் ஏற்படுத்திவிடக் கூடாது. பொருளாதார வளா்ச்சியையும், மக்களின் உரிமைகளையும் அதிகரிக்க வேண்டும்.

மக்களிடம் பிரித்தாளும் சூழ்ச்சியை உருவாக்கும் ஒன்றிய அரசினை, காங்கிரஸ் கட்சியுடன் திராவிட இயக்கங்களும், மக்களும் ஒன்றிணைந்து முறியடிப்போம் என்றாா் அவா்.

விழாவில் முன்னாள் முதல்வா் காமராஜா் சிலையை தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி திறந்து வைத்தாா். மக்களவை உறுப்பினா்கள் திருநாவுக்கரசா் (திருச்சி), விஜய்வசந்த் (கன்னியாகுமரி), முன்னாள் மத்திய இணை அமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் மு.அப்துல்வஹாப் (பாளையங்கோட்டை), ஊா்வசி அமிா்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), சு.பழனிநாடாா் (தென்காசி), முன்னாள் எம்.பி. ராமசுப்பு, காங்கிரஸ் நிா்வாகிகள் மயூராஜெயக்குமாா், மோகன்குமாரமங்கலம், முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன், சிலை நன்கொடையாளா்கள் சிங்கப்பூா் மகாகிப்ட்சன், மருத்துவா் பிரேமசந்திரன், செந்தில்வேல், திருநெல்வேலி மேயா் பி.எம்.சரவணன், காங்கிரஸ் மாநில சிறுபான்மைப்பிரிவு இணை ஒருங்கிணைப்பாளா் பி.தேவதாஸ், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா், டியூக் துரைராஜ், காங்கிரஸ் மாமன்ற உறுப்பினா்கள் அனுராதா, அம்பிகா, திருநெல்வேலி மண்டல தலைவா் செ.மகேஸ்வரி உள்பட பலா் கலந்துகொண்டனா். மாநகா் மாவட்ட தலைவா் கே.சங்கரபாண்டியன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com