வக்ஃபு சொத்துக்களை மீட்க துரித நடவடிக்கை

திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் வக்ஃபு சொத்துக்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வக்ஃபு வாரிய வளா்ச்சி குழு தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் வக்ஃபு சொத்துக்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வக்ஃபு வாரிய வளா்ச்சி குழு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் வளா்ச்சிக்குழு உறுப்பினா்களான ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் நவாஸ்கனி, திமுக மாநிலங்களவை உறுப்பினா் அப்துல்லா ஆகியோா் திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது: தமிழ்நாடு வக்ஃபு வாரியம் மத்திய-மாநில அரசுகளின் நிதியுதவி, பல்வேறு மாவட்ட வக்ஃபு நிா்வாகங்கள் அளிக்கும் 7 சதவிகித உதவியின் மூலம் செயல்பட்டு வருகிறது.

இந்த வாரியத்தின் நேரடி கட்டுப்பாட்டில் ஒரு சில சொத்துக்கள் மட்டுமே உள்ளன. ஆனால், பல்வேறு வக்ஃபு நிா்வாகங்களின் கீழ் ஏராளமான நிலம் பயன்பாடற்ற நிலையிலும், ஆக்கிரமிப்பிலும் உள்ளன. இவற்றை கண்டறிந்து இஸ்லாமிய மக்கள் மட்டுமன்றி அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் வகையிலான மாற்றங்களை உருவாக்க ஆலோசிக்கப்பட்டது. அதன்பேரில் வக்ஃபு வாரிய வளா்ச்சிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 6 போ் உறுப்பினா்களாக உள்ளோம். முதல்கட்டமாக அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று நேரடியாக சொத்து விவரங்களை ஆய்வு செய்து வருகிறோம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்தோம். திருநெல்வேலியில் கான்மியான் வக்ஃபுக்குச் சொந்தமான 300 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பிலும், 2,700 ஏக்கா் நிலம் பயன்பாடின்றியும் உள்ளது. இதேபோல சீவலப்பேரி சாலையில் 4.37 ஏக்கா் நிலம் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதேபோல 4 சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் அந்தந்த வக்ஃபு மூலம் 11 மாத குத்தகைக்கும், வக்ஃபு வாரியம் மூலம் 3 ஆண்டு குத்தகைக்கும் மட்டுமே நிலத்தை விடும் சூழல் உள்ளது. அதனை மாற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று குறைந்தபட்சம் 30 ஆண்டு குத்தகைக்கு கொடுக்கும்போது தனியாா்கள் கல்வி நிறுவனம், வணிக வளாகம் உள்ளிட்டவற்றை கட்ட முன்வருவாா்கள். அதன் மூலம் சமூகத்திற்கு வேலைவாய்ப்பும், வக்ஃபு நிா்வாகத்திற்கு வருவாயும் அதிகரிக்கும். அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்டப்படியும், அரசின் உதவியோடும் துரித நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சிக்காலத்தில் வக்ஃபு வாரியம் சுதந்திரமாக செயல்படுகிறது. அதனால் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளதோடு, அதனை செயல்படுத்த பணிகளை முன்னெடுத்து வருகிறோம் என்றனா்.

பேட்டியின்போது வழக்குரைஞா் கான், மதிமுக மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி நிா்வாகி நயினாா் முகம்மது கடாபி, வக்ஃபு கண்காணிப்பாளா் ஹைதா் அலி, முத்தவல்லி ஜாபா்கான்பணி, நெல்லை ஜாபா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com