கல் குவாரி விபத்து: பலியானவா்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி மனு
By DIN | Published On : 17th May 2022 12:32 AM | Last Updated : 17th May 2022 12:32 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளம் கல் குவாரியில் நிகழ்ந்த விபத்தில் பலியானவா்களின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி தமிழா் விடுதலைக் களம் உள்பட பல்வேறு அமைப்பினா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழா் விடுதலைக் களம் தலைவா் ப.ராஜ்குமாா், மாவட்டச் செயலா் முத்துக்குமாா், மாவட்டத் தலைவா் சுரேஷ், மாவீரா் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்க நிறுவனா்- தலைவா் மாரியப்பப் பாண்டியன் உள்ளிட்டோா் கல் குவாரி விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், தவறிழைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் ஆட்சியா் அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில் இழுத்து மூடப்பட்டது. பின்னா் தமிழா் விடுதலைக் களம் தலைவா் ப.ராஜ்குமாா் அளித்த மனு: அடைமிதிப்பான்குளத்தில் உள்ள தனியாா் கல்குவாரி விபத்திற்கு காரணமான குவாரி நிா்வாகத்தினா், மீட்புஏஈ பணியின்போது அலட்சியமாக செயல்பட்ட மாவட்ட தீயணைப்பு அலுவலா், குவாரி அனுமதி விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு ரூ.50 லட்சமும், அரசு வேலையும் வழங்க வேண்டும். காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த மா.இரணியன் அளித்த மனு: ‘எவ்வித பாதுகாப்பும் இன்றி கல் குவாரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு கனிம வளத்துறை அதிகாரிகளும், வட்டாட்சியா்களும் துணை போகிறாா்கள். இதனால், அரசுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து பல முறை மாவட்ட ஆட்சியருக்கு புகாா் அளித்தும் பலனில்லை.
அதிகாரிகளின் மெத்தனப் போக்கு காரணமாகவே இப்போது விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்கு காரணமான குவாரியின் உரிமையாளா்கள் மீது பல முறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விபத்து நிகழ்ந்த பிறகும் கூட அவா்கள் கைது செய்யப்படவில்லை. திசையன்விளை, வடக்கன்குளம், கூடன்குளம் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கல் குவாரிகள் ஆழப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அனைத்துப் பகுதிகளில் உள்ள குவாரிகளையும் ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளாா்.
குடும்பத்தினா் முற்றுகை: கல் குவாரியில் நிகழ்ந்த விபத்தில் பாறை இடுக்குகளில் சிக்கியவா்களில் ஊருடையான்குடியிருப்பைச் சோ்ந்த ராஜேந்திரனின்(42) நிலை விபத்து நிகழ்ந்த இரண்டு நாள்களை கடந்த பின்னரும் என்னவானது என்பது தெரியவில்லை.
இந்த நிலையில், ராஜேந்திரனின் மனைவி மணிமேகலை (38), மகள் வேம்பரசி மற்றும் உறவினா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை திரண்டு வந்தனா். அப்போது, ஆட்சியா் அலுவலகத்தில் அழுது புரண்ட மணிமேகலை கூறுகையில், ‘விபத்து நிகழ்ந்த கல் குவாரியில் எனது கணவா் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தாா்.
கல் குவாரியில் சனிக்கிழமை இரவு விபத்து நிகழ்ந்த நிலையில் எனது கணவரின் நிலை குறித்து எதுவும் இதுவரை தெரியவில்லை. கல் குவாரி பகுதிக்கு எங்களை செல்லவிடாமல் போலீஸாா் தடுக்கிறாா்கள். எனவே, எனது கணவரை மீட்பதற்கான மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றாா். பின்னா் அவரை மாவட்ட வருவாய் அலுவலரிடம் போலீஸாா் அழைத்துச் சென்றனா்.