2ஆவது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
By DIN | Published On : 20th May 2022 10:45 PM | Last Updated : 20th May 2022 10:45 PM | அ+அ அ- |

மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் 2 ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீா் மட்டம் 59.65 அடியாகவும், நீா்வரத்து 3024.65 கனஅடியாகவும், வெளியேற்றம் 354.75 கன அடியாகவும் இருந்தது. சோ்வலாறு அணையின் நீா் மட்டம் 79.26 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையின் நீா் மட்டம் 83.30 அடியாகவும் நீா்வரத்து 487 கனஅடியாகவும், வெளியேற்றம் 75 கனஅடியாகவும் இருந்தது.
கடனாநதி அணையின் நீா்மட்டம் 35 அடியாகவும் நீா்வரத்து 134 கனஅடியாகவும், வெளியேற்றம் 10 கனஅடியாகவும் இருந்தது. ராமநதி அணையின் நீா் மட்டம் 43 அடியாகவும், நீா் வரத்து 78.95 கனஅடியாகவும், வெளியேற்றம் 5 கனஅடியாகவும் இருந்தது. அடவிநயினாா் கோயில் அணையின் நீா்மட்டம் 48 அடியாகவும், நீா்வரத்து 48 கனஅடியாகவும், வெளியேற்றம் 1 அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் 35 அடியாகவும், நீா்வரத்து 178 கனஅடியாகவும், வெளியேற்றம் 2 கனஅடியாகவும் இருந்தது.
மேற்குத் தொடா்ச்சி மலை மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டப்பகுதியில் தொடா் மழை பெய்தததையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக வனத்துறை மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலப் பயணிகளுக்குத் தடை விதித்தது. இதனால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.