பிசான சாகுபடிக்கு பாபநாசம் அணை திறப்பு: 86,000 ஏக்கா் நிலங்களுக்கு பாசனம்

பிசான பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீரை தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு வெள்ளிக்கிழமை திறந்துவிட்டாா்.

பிசான பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீரை தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு வெள்ளிக்கிழமை திறந்துவிட்டாா். இதன்மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமாா் 86 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

பிசான பருவ விவசாயப் பணிகளுக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீா் திறக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

அதன்பேரில், சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பாபநாசம் அணையில் இருந்து தண்ணீரை வெள்ளிக்கிழமை திறந்துவிட்டாா். பின்னா் , செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, பிசான சாகுபடிக்காக பாபநாசம் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது . இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்குக் கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன், கோடகன், பாளையங் கால்வாய், திருநெல்வேலி கால்வாய், தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூா் மேலக்கால், மருதூா் கீழக்கால், தெற்கு - வடக்கு பிரதானக் கால் ஆகிய கால்வாய்களின் கீழ் 86,107 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.

அணையிலிருந்து 31.3. 2023வரை 148 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும் . தற்போது விநாடிக்கு 1,200 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வெள்ளநீா்க் கால்வாய்த் திட்டப் பரிசோதனைக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படும் என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஒருபோதும் அவ்வாறு தண்ணீா் திறக்கப்பட மாட்டாது. மழைக் காலத்தில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை வைத்தே பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் வே. விஷ்ணு, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் முகமது சபீா் ஆலம், பாளையங்கோட்டை எம்எல்ஏ மு. அப்துல் வகாப், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஸ், நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் பத்மா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com