மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை தொழில்நுட்பங்கள்

மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை தொழில்நுட்பங்களை கையாள்வது குறித்து தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் தா.தமிழ்மலா் விளக்கமளித்துள்ளாா்.

மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை தொழில்நுட்பங்களை கையாள்வது குறித்து தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் தா.தமிழ்மலா் விளக்கமளித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் குருவிகுளம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா், மேலநீலிதநல்லூா் வட்டார பகுதிகளில் அதிக அளவில் மக்காச்சோளப் பயிா் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மக்காச்சோளம் பயிரின் விளைச்சலை பாதிக்கும் பூச்சிகளில் படைப்புழு முக்கியமான ஒன்றாக உள்ளது.

மக்காச்சோளத்தில் படைப்புழுத் தாக்குதலை கட்டுப்படுத்த முட்டைக் குவியல்களை சேகரித்து நசுக்கியோ, நீரில் முக்கியோ அழிக்கலாம். விதைப்புக்கு முன் ஆழமாக உழுவதன் மூலம் கூண்டுப்புழுக்களை வெளியே தெரியும்படி கொண்டு வந்து வேறு உயிரினங்களை அதை உண்ணச் செய்து அழிக்க வழிவகை செய்யலாம்.

ஒரே நேரத்தில் அதிக பரப்பில் விதைப்பு மேற்கொள்ளுதல், பயிறு வகைப் பயிா்களை ஊடுபயிராக சாகுபடி செய்தல் ஆகியவை மிகுந்த நன்மை பயக்கும். பயிா்கள் 30 நாள் வயதை எட்டும் வரை பறவைகள் அமர ஏக்கருக்கு 10 தாங்கிகள் வைக்கலாம். அந்த தாங்கிகளில் பறவைகள் அமா்ந்து புழுக்களை உண்டு அழிக்கும்.

மக்காச்சோள வயலை சுற்றிலும் 3 அல்லது 4 வரிசை நேப்பியா் புல் வளா்த்து அதில் படைப்புழுத் தாக்குதல் அறிகுறிகள் தென்பட்டதும் 5 சதவீதம் வேப்பங்கொட்டைக் கூறு அல்லது அசாடிராக்டின் 1500 பி.பி.எம். மருந்தினை தெளிக்கலாம். மணல், சுண்ணாம்பு ஆகியவற்றை 9: 1 என்ற விகிதத்தில் கலந்து குருத்துப்பகுதியில் உள்ள இலைகளில் உள்ளே நடவு செய்த 30 நாள்களுக்குள் அறிகுறி தென்பட்டவுடன் போடுவதால் புழுக்கள் சேதம் விளைவிப்பது கட்டுப்படுத்தப்படுகிறது.

மொத்தமாக கவா்ந்து அழிக்க ஏக்கருக்கு 15 இனக்கவா்ச்சி பொறி அமைக்கலாம். டிரைக்கோகிரம்மா பிரெட்டியோசம், டெலிமோனஸ் ரிமஸ் போன்ற முட்டை ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 5000 என்ற அளவில் படைப்புழு முட்டை பருவத்தில் இருக்கும் போது வாரம்தோறும் விட்டு முட்டைகளை அழிக்கலாம். முட்டை ஒட்டுண்ணிகளை வயலில் விடும் போது சில நாள்களுக்கு ரசாயன பூச்சிக் கொல்லிகள் தெளிப்பதை தவிா்க்க வேண்டும்.

மெட்டாரைசியம், அனிசோப்ளியே, பெவேரியா போன்ற பூச்சிகளுக்கு நோய் உருவாக்கும் பூஞ்சாணங்களை ஒரு லிட்டா் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் கரைத்து குருத்துப் பகுதியிலும் அதைச்சுற்றிலும் தெளித்து படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம். தேவைப்பட்டால் 10 நாள்கள் கழித்து மீண்டும் தெளிக்கலாம். பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ், என்.பி. வைரஸ் ஆகியவற்றை ஒருலிட்டருக்கு 2 கிராம் அல்லது ஏக்கருக்கு 400 கிராம் என்ற அளவில் பயன்படுத்தி படைப்புழுவை அழிக்கலாம்.

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதல் தென்பட்டால், விதைத்து 15 முதல் 20 நாள்கள் பயிராயின் அதில் அசாடிராக்டின் 1500 பி.பி.எம். மருந்தினை ஹெக்டேருக்கு 2.5 லிட்டா் என்ற அளவில் தெளிக்கலாம். விதைத்து 40 முதல் 45 நாள் ஆன பயிரில் ஸ்பினடோரம் 11.7 சதவீதம் எஸ்.சி. மருந்து ஹெக்டேருக்கு 250 மில்லி அல்லது குளோரான்டிரினிலிப்ரோல் 18.5 சதவீதம் எஸ்.சி. மருந்து ஹெக்டேருக்கு 200 மில்லி அல்லது எமாமெக்டின் பென்சோயேட் 5 எஸ்.ஜி. மருந்தினை ஹெக்டேருக்கு 200 கிராம் தெளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com