கோயில்களில் உலோக திருமேனி பாதுகாப்பில் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு வழிமுறைகள், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி உத்தரவு

தமிழகத்தில் உள்ள கோயில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு அறைகளில் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு அறைகளில் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. தினகரன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள சிலைக்கடத்தல் வழக்குகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் உள்ள கோயில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு அறையை ஆய்வு செய்தேன்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு அறைகளிலும் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு வழிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. சிலைகளைப் பெற வருவோரின் புகைப்படம், பெயா் விவரம் உள்ளிட்டவற்றை முறையாக பதிவு செய்து கொள்வது உள்ளிட்டவை அந்த வழிமுறைகளில் அடங்கும்.

தமிழக காவல் துறையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்பு பொருளாதார குற்றப்பிரிவுடன் இணைந்து செயல்பட்டு வந்தது. ஆனால், முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் இப்போது தனியாக செயல்படுகிறது. இதனால் கூடுதலாக காவலா்கள் இப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு வழக்குகளை விரைந்து முடிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

நிகழாண்டில் மாநிலம் முழுவதும் இதுவரை மொத்தம் 40 சிலைக் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 43 போ் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 199 சிலைகள் மற்றும் கலைப் பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன.

உள்நாடு மட்டுமன்றி வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சோ்ந்த சிலைகள் குறித்து இணையவழியில் அறிந்து பட்டியலிடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தைச் சோ்ந்த 60 சிலைகள் வெளிநாடுகளில் இருப்பது உறுதியாகியுள்ளது. 35 சிலைகள் அமெரிக்காவிலும், 15 சிலைகள் சிங்கப்பூரிலும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் சில சிலைகளும் இருப்பது தெரியவந்துள்ளது. இவைகள் தஞ்சாவூா், திருவாரூா் மற்றும் தென்மாவட்ட கோயில்களின் சிலைகளாகும்.

அவற்றை சம்பந்தப்பட்ட நாடுகளின் அனுமதியோடு மீட்டுவர கடிதங்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாரம்பரியம் மிகுந்த கோயில்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தவும், சுமாா் ஒரு மாத கால பதிவுகளைச் சேமித்து பராமரிக்கும் வசதியை ஏற்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளை விரைந்து முடிக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com