மாசில்லாத தீபாவளி: ஆட்சியா் வேண்டுகோள்

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு மக்களுக்கு மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு மக்களுக்கு மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தீபாவளி, மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீா், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், முதியோா்கள், நோய்வாய்ப்பட்டுள்ள வயோதிகா்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறாா்கள்.

உச்ச நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிா்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும் கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீா்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போதிய அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். எனவே, பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் காற்றை மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடா்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிா்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிா்க்க வேண்டும். எனவே,பொதுமக்கள் சுற்றுச் சூ ழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com