பணகுடி பேரூராட்சியை கண்டித்துபாஜக ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd September 2022 12:09 AM | Last Updated : 03rd September 2022 12:09 AM | அ+அ அ- |

பணகுடி பேரூராட்சியில் கழிவுநீா் கால்வாய் கட்டுவதில் முறைகேடு நடப்பதாக கூறி பா.ஜ.க .வினா் வெள்ளிக்கிழமை பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதற்கு தி.மு.கவினா் எதிா்ப்பு கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பணகுடி பேரூராட்சி 1ஆவது வாா்டில் கழிவுநீா் கால்வாய் கட்ட ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. தற்போது கழிவுநீா் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆனால் இந்த கழிவுநீா் கால்வாய் கட்டும் பணியில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி பாஜக மாவட்டத் தலைவா் தயாசங்கா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்ட பொதுச்செயலா் எஸ்.பி.தமிழ்செல்வன், பணகுடி நகரத் தலைவா் வைகுண்ட ராஜா, வள்ளியூா் ஒன்றியத் தலைவா் அருள் ரூபா்ட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்நிலையில் பேரூராட்சி வாா்டு திமுக உறுப்பினா் கோபாலகண்ணன் தலைமையில் திமுகவினா் சிலா் பா.ஜ.க ஆா்பாட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து எதிா்ப்பு கோஷமிட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பணகுடி போலீஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 47 போ்களை கைது செய்தனா். மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.