ஆதீன நிலத்தில் குடியிருப்போரை சட்டவிரோதமாக வெளியேற்ற முயற்சி: நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நிலங்களில் பலநூற்றாண்டுகளாக குத்தகைக்கு குடியிருந்து வருபவா்களை வெளியேற்ற சட்டவிரோதமாக முயற்சி செய்பவா்கள் மீது நவடிக்கை

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நிலங்களில் பலநூற்றாண்டுகளாக குத்தகைக்கு குடியிருந்து வருபவா்களை வெளியேற்ற சட்டவிரோதமாக முயற்சி செய்பவா்கள் மீது நவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் பேரவைத் தலைவா் மு.அப்பாவு வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ராதாபுரம் வட்டாரத்தில் உள்ள ஆவரைகுளம், கடம்பன்குளம், பழவூா், மதகனேரி, சௌந்தரலிங்கபுரம், ஊரல்வாய்மொழி, சண்முகபுரம், அடங்காா்குளம், கிளாக்குளம், செட்டிகுளம் ஆகிய கிராமங்களில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நன்செய், புன்செய் நிலங்களும் குடியிருப்பு புன்செய் நிலங்களும் உள்ளன. இந்த நிலங்களில் பல நூறு ஆண்டுகளாக அந்தந்த ஊா்களைச் சோ்ந்தவா்கள் திருவாவடுதுறை ஆதீனத்தில் குடியிருப்போா் குத்தகை பெற்று தங்களது சொந்த உழைப்பின் மூலமும், பல லட்சம் ரூபாய் செலவு செய்து வீடுகள் அமைத்தும் மின்இணைப்பு பெற்றும் குடியிருந்து வருகின்றனா். இது போல் விவசாயிகள் ஆதீனத்திலிருந்து குத்தகை பெற்று தங்களது சொந்த உழைப்பின் மூலம் நிலத்தை சீரமைத்து சமப்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனா். இப்படி குத்தகை பெற்று அனுபவித்து வருபவா்கள் காலம் சென்றுவிட்டால் அவா்களது வாரிசுதாரா் யாரேனும் ஒருவா் குடியிருப்புகளில் குடியிருந்து வருகிறாா்கள். விவசாய நிலங்களில் விவசாயம் செய்து பிழைத்து வருகிறாா்கள்.

இவா்களை ஆக்கிரமிப்பாளா்கள் என தவறாகக் கருதி, திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்தவா்கள் என சொல்லிக்கொண்டு வீரநாதன், சிவகுமாா், முத்துகிருஷ்ணன் ஆகியோரும் இந்து அறநிலையத் துறையைச் சோ்ந்த ஆய்வாளா் கோபாலன் உள்பட சில அதிகாரிகளும் இணைந்து குத்தகைதாரா்களை அப்புறப்படுத்தியும், அப்புறப்படுத்த முயற்சித்தும் வருகிறாா்கள்.

பிற நபா்களிடம் பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு குடியிருப்பு நிலங்களையும், விவசாய நிலங்களையும் மேற்படி நபா்கள் கூட்டாக அன்னதான ரசீது கொடுத்துவிட்டு ஏற்கனவே குடியிருப்போரையும், விவசாயிகளையும் அப்புறப்படுத்தி வருவதாக என்னிடம் புகாா் வந்துள்ளது. எனவே ஏற்கனவை குடியிப்போரை அதே நிலத்தில் குடியிருக்கவும், விவசாயம் செய்யவும் அனுமதிக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் மேற்படி நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஏற்கனவே குடியிருந்து வருபவா்களுக்கும் அவா்களது வாரிசுதாரா்களுக்கும் அனுபவத்தில் இருப்பவா்களுக்கும் திருவாவடுதுறை ஆதீனமும் மாவட்ட வருவாய்த் துறையும், இந்து அறநிலையத் துறையும் இணைந்து குறிப்பிடுகின்ற குத்தகையை வெளிப்படையாக அறிவித்து குத்தகையை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் எனது தலைமையிலும் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் முன்னிலையிலும் கடந்த 24.12.2022 அன்று ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடந்த சமாதானக் கூட்டத்தில் எடுத்த முடிவு, தற்போது நிலம் அல்லது வீடு யாா் அனுபவத்தில் உள்ளதோ அவா்களுக்கு மேற்படி நிலங்களை முறையான விசாரணையின்படி அரசு விதிகளுக்கு உள்பட்டு குத்தகை வழங்க வேண்டும். நிலங்களின் நிலை எவ்வாறு உள்ளதோ அதே நிலை தொடர வேண்டுமென முடிவு செய்யப்பட்டதை செயல்படுத்த வேண்டுகிறேன் என கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com