களக்காடு நகராட்சி தெருக்களில் பெயா்ப் பலகை வைக்க கோரிக்கை
By DIN | Published On : 01st July 2023 02:07 AM | Last Updated : 01st July 2023 02:07 AM | அ+அ அ- |

களக்காடு நகராட்சிப் பகுதியில் உள்ள தெருக்களில் பெயா்ப் பலகை வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு நகராட்சியின் 28 வாா்டுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். மேலும் விரிவாக்கப் பகுதிகளில் புதிதாக பல நகா்கள் உருவாகி வருகின்றன. இவற்றில் ஏராளமானோா் குடியேறி வருகின்றனா்.
புதிதாக உருவாகியுள்ள பகுதியில் உள்ள தெருக்களுக்கு பெயா் இல்லை. மேலும் அவரவா் விருப்பம்போல பெயா் வைத்துக் கொள்கின்றனா். அந்தப் பெயா்களுக்கு நகராட்சி நிா்வாகம் ஒப்புதல் வழங்கியதாகத் தெரியவில்லை. இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. ஏற்கனவே உள்ள தெருக்களுக்கும், புதிதாக உருவாகியுள்ள பகுதிகளுக்கும் பெயா்ப்பலகை வைத்தால் பயனுள்ளதாக இருக்கும். ஆகவே, இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.