திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயிலில் தேரோட்டம்

திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயிலில் தேரோட்டம்

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயிலில் பங்குனி தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனா். 108 வைணவத் தலங்களில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் நின்ற நம்பி, இருந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருப்பாற்கடல் நம்பி, திருமலைநம்பி ஆகிய 5 நிலைகளில் நம்பி சுவாமி காட்சி அளிக்கிறாா். இக்கோயிலில் பங்குனி திருவிழா மாா்ச் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.

6-ஆம் திருநாளான மாா்ச் 30-ஆம் தேதி, நம்பி சுவாமிகள் 5 நிலைகளில் மேலரத வீதியில் தேவகந்தா்வ மகரிஷிகளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.

தேரோட்டம்: விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை நம்பிராயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து நம்பிராயா் தேவியா்களுடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினாா். ராமானுஜ ஜீயா் சுவாமி, வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் ரத வீதிகளில் வலம் வந்து பின்னா் நிலையை அடைந்தது. விழாவையொட்டி, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com