கூடங்குளம் முதலாவது அணுஉலையில் 79 நாள்களுக்குப் பின் மின்உற்பத்தி

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்திலுள்ள அணுமின் நிலையத்தில் முதலாவது அணுஉலையில் 79 நாட்களுக்குப் பின், செவ்வாய்க்கிழமை மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.

கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில் நுட்பத்துடன் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரு அணு உலைகளில் இருந்து 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மேலும், 3-4ஆவது அணுஉலைகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையிலும் 5, 6 ஆவது அணுஉலைகளின் பணிகள் தொடா்ந்து நடைபெற்றும் வருகின்றன.

இந்நிலையில் முதலாவது அணுஉலையில் பராமரிப்பு, எரிபொருள் மாற்றுவதற்காக கடந்த ஜன. 29ஆம் தேதி முதல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

அதைத் தொடா்ந்து முதலாவது அணுஉலையில் பராமரிப்பு பணிகளும் எரிபொருள் நிரப்பும் பணியும் நடைபெற்று வந்தன. இப்பணிகள் முடிவடைந்து 79 நாள்களுக்குப் பின்னா் மின்உற்பத்தி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. மாலை நிரவரப்படி 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக அணுமின்நிலைய வட்டாரத்தில் தெரிவித்தனா்,. 2-ஆவது அணுஉலையில் வழக்கம் போல் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com